Published : 02 Aug 2024 05:11 AM
Last Updated : 02 Aug 2024 05:11 AM

அருந்ததியருக்கான உள் இடஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின், கட்சித் தலைவர்கள் வரவேற்பு

சென்னை: தமிழகத்தில் பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பை வரவேற்று முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூகநீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.

முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டுஅருந்ததியர் சமுதாயத்துக்கான 3 சதவீத உள்ஒதுக்கீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றினோம். இந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் இத்தீர்ப்பு மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டி இருப்பதுடன், சமூகநீதி தழைக்கவும் வழிவகை செய்திருப்பது பாராட்டத்தக்கதாகும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தி 1988-ம் ஆண்டிலேயே வன்னியர் சங்கமும் அருந்ததியர் சங்கமும் இணைந்து ஈரோட்டில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தியது முதல்,2008-ம் ஆண்டு 13 அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்களுடன் பாமக தலைவர் ஜி.கே.மணியை அனுப்பி அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்திக்கச் செய்து, அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்க வைத்தது வரை பாமகவின் பங்களிப்பு அளப்பரியது.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: அருந்ததியர் மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், தமிழகத்தில் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தை முன்நின்று நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி, அருந்ததியர் இயக்கங்கள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளுக்கும் இத்தகைய உரிமைகளுக்காக பல்வேறு களங்களைக் கண்ட அருந்ததிய மக்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக கைகோர்த்த ஜனநாயக உள்ளம் கொண்டோருக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று மத்திய அமைச்சர் எல்.முருகனும் வரவேற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x