Last Updated : 08 May, 2018 09:04 AM

 

Published : 08 May 2018 09:04 AM
Last Updated : 08 May 2018 09:04 AM

ஆயுஷ் படிப்புகளுக்கும் கட்டாயம் என்பதால் நீட் எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்ட இத்தேர்வின் முடிவுகளை ஜூன் 5-ம் தேதி வெளியிட மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்டமிட்டுள்ளது.கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் 88,881 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 1,07,288 ஆக அதிகரித்தது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு 11.38 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 13.26 லட்சமாக உயர்ந்துள்ளது. விண்ணப்பித்தவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதியுள்ளனர்.

மாணவர்கள் அதிகரிப்பு ஏன்?

விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததற்கான காரணங்கள் பற்றி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த ஆண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் நீட் தேர்வு நடந்தது. இந்த ஆண்டு ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.

ஆயுஷ் படிப்புகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பார்கள். அவர்களும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவர்களுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்பதால், அவர்களும் விண்ணப்பித்தனர். அதனால், மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குளறுபடிகள் நடக்காது

நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து டெல்லி சிபிஎஸ்இ அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களிடம் நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நீட் தேர்வில் நடக்கும் ஒருசில குளறுபடிகளும் வரும் ஆண்டுகளில் களையப்படும். கடந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 10 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது. ஒவ்வொரு மொழி வினாத்தாளிலும் கேள்விகள் மாறிவிட்டன. இது பெரும் சர்ச்சையானது. இந்த ஆண்டு அந்த குளறுபடிகள் சரிசெய்யப்பட்டு, அனைத்து மொழிகளிலும் ஒரேமாதிரியான கேள்விகள் இடம்பெறும் வகையில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டன.

இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்ததால், வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு இந்த பிரச்சினை நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு மையங்கள் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் 158 மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு காஞ்சிபுரம், திருவள்ளூரும் சேர்க்கப்பட்டு, மொத்தம் 10 நகரங்களில் 170 மையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், சென்னையில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 49 மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x