Published : 06 May 2018 08:25 AM
Last Updated : 06 May 2018 08:25 AM

கேரள முதல்வர் உட்பட 6 பேருக்கு விசிக விருது

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராஜர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய 6 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும் தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுவோரை சிறப்பிக்கும் விதமாக இந்த விருதுகளை அளித்து வருகிறோம்.

திமுக தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உள்ளிட்ட பல தலைவர்களுக்கு இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருதுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், பெரியார் ஒளி விருதுக்கு ஆந்திராவைச் சேர்ந்த மக்கள் பாடகர் கத்தார், காமராஜர் கதிர் விருதுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், காயிதேமில்லத் பிறை விருதுக்கு ‘வைகறை வெளிச்சம்’ இதழாசிரியர் மு.குலாம் முகமது, அயோத்திதாசர் ஆதவன் விருதுக்கு மருத்துவர் அ.சேப்பன் (மறைவுக்கு பின்), செம்மொழி ஞாயிறு விருதுக்கு ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுகள் வரும் 15-ம் தேதி மாலை சென்னை காமராஜர் அரங்கில் நடக்கும் விழாவில் அளிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x