Published : 01 Aug 2024 05:45 AM
Last Updated : 01 Aug 2024 05:45 AM
சென்னை: சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெறும் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைப்பதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகஸ்ட் 7-ம் தேதி சென்னை வருகிறார்.
சென்னை, தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் சிறப்பான பங்களிப்பை நினைவுகூரும் வகையில், ‘பசியில்லா உலகம்; பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனின் தொலைநோக்குப் பார்வையில் பசுமைப் புரட்சி’ என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கம் வரும் ஆக.7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களும் நிறுவன வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கில், பசுமைப்புரட்சியின் கொள்கைள், உயிர்ப்பன்மை மற்றும் இயற்கைவளங்கள் குறித்த மேலாண்மை மற்றும் பாதுகாப்பு, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான நிலைத்த வேளாண்மை, பருவகால மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. கருத்தரங்கை ஆகஸ்ட் 7-ம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா, ஒடிசா மாநில துணை முதல்வர் கனக் வர்தன் சிங் தியோ, நபார்டு வங்கி தலைவர் கே.வி.ஷாஜி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய தலைவர் சவுமியா சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில், தமிழக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, இந்து என்.ராம் மற்றும் பல்வேறு நாட்டு அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT