Published : 01 Aug 2024 05:08 AM
Last Updated : 01 Aug 2024 05:08 AM
சென்னை: சென்னை பெருநகர முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். டிஜிபி சங்கர் ஜிவால் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையத்தில் பிறந்த ஏ.கே.விஸ்வநாதன், பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். தொடர்ந்து, சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்த அவர், முதுகலை சட்டப் படிப்பு முடித்து, அதில் பிஹெச்.டி. பட்டமும் பெற்றார்.
1990-ல் ஐபிஎஸ் அதிகாரியான அவர், பல்வேறு இடங்களில் பணியாற்றிய பின்னர் 2017 முதல் 2020 வரை சென்னை காவல் ஆணையராகப் பணியாற்றினார். டிஜிபி பதவி உயர்வு பெற்ற அவர், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத் தலைவராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ளார்.
இவரது தாத்தா பெருமாள், தலைமைக் காவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தந்தை அய்யாசாமி எஸ்.ஐ.யாக பணியில் சேர்ந்து, எஸ்.பி.யாக பணி ஓய்வு பெற்றவர். மூன்றாவது தலைமுறையாக காவல் துறையில் சேர்ந்த ஏ.கே.விஸ்வநாதன், டிஜிபியாக பணி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி சீமாஅகர்வால் (டிஜிபி), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக உள்ளார்.
சென்னை காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்பு வகித்தபோது ‘மூன்றாவது கண்’ என்ற பெயரில் சென்னை முழுவதும் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்களை நிறுவினார். குற்றச் செயல்களைத் தடுப்பதுடன், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறியவும் இவை போலீஸாருக்கு பெரிதும் உதவுகின்றன.
அதேபோல, குற்றங்கள் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நவீனத் தொழில்நுட்பத்தைப் புகுத்தி, காவல்துறையை டிஜிட்டல் மயமாக்கினார். மேலும், சமூக வலைதளங்களைக் கண்காணிக்க தனி பிரிவையும் ஏற்படுத்தினார்.
அவரது பதவிக் காலத்தில் சென்னை நகரம் பெண்கள், குழந்தைகளுக்கு நாட்டிலேயே பாதுகாப்பான பெருநகரமாக அறிவிக்கப்பட்டது. சிறப்பான பணிக்காக இரு முறை குடியரசுத் தலைவர் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற பணி ஓய்வு பிரிவு உபச்சார விழாவில், ஏ.கே.விஸ்வநாதனுக்கு சட்டம்-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில், சென்னை காவல் ஆணையர் அருண், டிஜிபி-க்கள் சந்தீப் ராய் ரத்தோர், அபய் குமார் சிங், வன்னிய பெருமாள், கூடுதல் டிஜிபி-க்கள் மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் ஏ.கே.விஸ்வநாதன் பேசும்போது, ‘‘காவல் துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றிய நிறைவுடன் விடைபெறுகிறேன். எனதுபணியை சிறப்பாக மேற்கொண்டதை பெருமையாகக் கருதுகிறேன். அடுத்த பிறவி இருந்தால், அதிலும் நான் காவல் துறையில் பணிபுரியும் வாய்ப்பை இறைவன் வழங்க வேண்டுகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT