Published : 01 Aug 2024 05:00 AM
Last Updated : 01 Aug 2024 05:00 AM
சென்னை: வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிமுக மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண நிதியாக தலா ரூ.1 கோடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவின் காரணமாக பேரிழப்பை சந்தித்துள்ள கேரள மாநிலத்துக்கு தேவையான நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கவும், போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளை துரிதப்படுத்தவும் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும்மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய, அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணநிதியாக வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் மீட்பு குழு: இதேபோன்று, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரள மாநிலம் வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பேரிடரில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடியை, கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மூலம் காசோலையாக வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கு வயநாடு மாவட்டத்துக்கு அருகில்உள்ள நீலகிரி மாவட்ட காங்கிரஸ்கமிட்டி தலைவரும் உதகை எம்எல்ஏவுமான ஆர்.கணேஷ் ஏற்பாட்டில் கூடலூர் தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 80 பேர் கொண்ட மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது உடனிருந்த தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், செல்வப்பெருந்தகையின் வேண்டுகோளை ஏற்று வயநாடு நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் தரு வதாக தெரிவித்தார்.
வங்கி ஊழியர் சங்கம் ரூ.25 லட்சம்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் முன்வந்துள்ளன.
இதன்படி, முதற்கட்டமாக, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் அனைத்து கேரளா வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சேர்ந்து ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. மேற்கொண்டு தேவையான அளவுக்கு நிவாரண உதவிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT