

ஆடிப்பெருக்கு நாளில் புதுமணத் தம்பதிகள் காவிரிக் கரையில் திரண்டனர். பெண்கள் காவிரித் தாயை வழிபட்டு மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர்.
ஆடி 18-ம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. காவிரியில் ஆடியில் பெருகி வரும் தண்ணீர் விளைச்சலை பெருக்கி விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்துவது போல, வாழ்வில் மகிழ்ச்சியும், நல்லன எல்லாமும் பெருக வேண்டும் என வேண்டி புதுமணத் தம்பதியர், பெண்கள் திரண்டுவந்து பழங்கள், மலர்களை வைத்து பூஜித்து காவிரித் தாயை வழிபடுவது வழக்கம்.
இந்தாண்டு டெல்டா சாகுபடிக் காக மேட்டூர் அணையில் குறித்த தேதியில் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், குடிநீருக்காகவும், ஆடிப்பெருக்கை கொண்டாடவும் திறக்கப்பட்ட தண்ணீரில் மணநாளில் அணிந்திருந்த மாலை களைக் கொண்டுவந்து காவிரி நீரில் விட்டுவிட்டு, காவிரித் தாயை வணங்கினர் புதுமணத் தம்பதியர்.
திருச்சியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, சிந்தாமணி ஓடத்துறை படித்துறை, தில்லை நாயகம் படித்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை முதலே ஏராளமான பெண்கள், பக்தர்கள் திரண்டு வந்து காவிரித் தாயை வழிபட்டனர். புதிதாக மணமான பெண்கள் உட்பட ஏராளமான பெண்கள் மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து வழிபட்டபின், ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர்.
திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைந்து விரைவில் திருமணமாக வேண்டும் என வேண்டி ஓடத்துறை வேப்ப மரத்தில் மஞ்சள் கயிறு கட்டினர். திருச்சி மாவட்டத்தில் திருஈங்கோய் மலை படித்துறை, முசிறி, முக்கொம்பு, வாத்தலை, பேட்டைவாய்த்தலை, திருப்பராய்த்துறை, முத்தர சநல்லூர், துறையூர் பெருமாள் மலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் திரண்டு நீர்நிலைகளில் நீராடி, கோயில் களில் சுவாமி தரிசனம் செய்தனர். பேட்டைவாய்த்தலை உட்பட பல இடங்களில் காவிரித் தாயை பொது மக்கள் வழிபட்டனர்.