மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி: சிறப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (நூறுநாள் வேலை)திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்னமாதிரியான பணிகளை வழங்கலாம் என்பதற்கான சிறப்பு வழிகாட்டுதல்களை ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஊரகவளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பணியிடத்தில் மாற்றுத் திறனாளிகளால் தொழிலாளர்களுக்கு தண்ணீர் விநியோகிக்க அனுமதிக்கலாம். குழந்தைகளை பார்த்துக் கொள்ளுதல், 5 குழந்தைகளுக்கான பராமரிப்பாளருக்கு உதவி செய்தல், 100 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றும் களத்தில் பணியிட உதவியாளராக இருத்தல் உள்ளிட்ட பணிகளில் நியமிக்கலாம். இதுதவிர சிறிய பணிகளிலும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம்.

மாற்றுத் திறனாளிகள் ஒரு மணிநேர உணவு இடைவேளை உட்பட 8 மணி நேரம் பணியில் ஈடுபட்டால் அவர்களுக்கு முழு நேர ஊதியம் வழங்க வேண்டும்.

உடல் உழைப்பு பணிகளை செய்யும் திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள், காடுகளை அகற்றுதல், தூர்வாருதல், நடவு செய்தல் மற்றும் நிரப்புதல், நீர் பாய்ச்சுதல் போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தலாம். இந்தவேலைகளுக்கு வழக்கமான தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவுகளில் 50 சதவீதம் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்.

அனைத்து மாற்றுத் திறனாளி தொழிலாளர்களுக்கும் பணி வழங்குவதையும், முழு ஊதிய விகிதத்தைப் பெறுவதையும் உறுதிசெய்ய வேண்டும்.

புதிய குளங்கள் மற்றும் புதியகால்வாய் அமைத்தல், நாற்றங்கால் உயர்த்துதல், தோட்டம், பண்ணைக் குட்டைகள் உள்ளிட்ட பணிகளில் குறி்ப்பிட்ட அளவு மாற்றுத் திறனாளிகளை ஈடுபடுத்த வேண்டும். அவர்களின் மனித வேலை நாட்களையும் அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு இயக்குநர் அனுப்பிஉள்ள கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in