Published : 31 Jul 2024 06:07 AM
Last Updated : 31 Jul 2024 06:07 AM

சரபங்கா நீரேற்று திட்டத்தை 3 ஆண்டுகளாக முடிக்கவில்லை: அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கண்டனம்

சென்னை: மேட்டூர் அணையின் உபரி நீரை, சரபங்கா வடிநில ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை 3 ஆண்டுகளாகியும் முடிக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியைக் கடந்தவுடன் வெளியேற்றப்படும் உபரிநீர், கடலில் கலந்து வீணாகும். எனவே,அணையின் உபரி நீரை நீரேற்றுப்பாசனம் மூலம் சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தை, ரூ.565 கோடியில் செயல்படுத்த திட்டமிட்டு, 2020 மார்ச் 4-ம் தேதி அடிக்கல் நாட்டிவைத்தேன்.

இந்த திட்டத்தால் 9 ஒன்றியங்களில் உள்ள 12 பொதுப்பணித் துறை ஏரிகள், 88 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் குட்டைகள் என மொத்தம் 100 ஏரிகள் நிரம்பி, சுமார் 4,300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், 100 ஏரிகளைச் சுற்றியுள்ள, சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, ஆயிரக்கணக்கான கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகள் நீர்செறிவு பெறும். இதனால், விவசாயம், குடிநீர் மற்றும் கால்நடை வளர்ப்பு மேம்படும்.

இந்த திட்டத்தின் முதல்கட்ட வேலைகள் முடிவடைந்து, திப்பம்பட்டி பிரதான நிலையத்தில் இருந்து நீரேற்று முறையில் குழாய்கள் மூலம் 6 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் பணிகளை 2021 பிப். 27-ம்தேதி தொடங்கிவைத்தேன். ஆனால், திமுக அரசு ஆட்சிக்கு வந்து 38 மாதங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள பணிகளை இன்னும் முடிக்கவில்லை.

தற்போது மேட்டூர் அணை 120 அடியை எட்டும் நிலையில், அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் வீணாகக் கடலில் கலக்கும் அவலம் நீடிக்கிறது. இதற்காக திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இனியாவது, வறண்ட பகுதிகளுக்கு பாசன வசதியை அளிக்கும் சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x