Published : 31 Jul 2024 04:25 AM
Last Updated : 31 Jul 2024 04:25 AM
சென்னை: சேலம் தலைவாசலில் உள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையத்துக்கான பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியின்போது சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்ரோட்டில் தொடங்கப்பட்ட கால்நடைப் பூங்கா இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
சேலம், தலைவாசலில் அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1,866.28 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய உலகத்தரம் வாய்ந்தகால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் ரூ.564.44 கோடி திட்ட முதலீட்டில் அமைக்க 2019-ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது.
இந்த ஆராய்ச்சி நிலையத்தில் மேற்காள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள், குடிநீர் வழங்கும் பணிகள், திட்டமிடப்பட்ட 9 வளாகங்களின் கட்டுமானம் மற்றும் மின் இணைப்பு ஆகிய பணிகளை பொருத்தவரை திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது 50 சதவீத பணிகள் கூடமுடிந்திருக்கவில்லை.
சரியானதிட்டமிடல் இருந்திருந்தால் காலதாமதத்தைத் தவிர்த்திருக்கலாம். அவர்கள் ஆட்சியில் சரியான திட்டமிடுதல் இன்றி, அவசரகதியில், மக்கள் வரிப்பணத்தில் அதிக பொருட்செலவில் இந்நிலையத்தை தொடங்கியுள்ளனர். கால்நடைப் பராமரிப்பு என்பது அதிக அளவில் தண்ணீர் தேவையுடைய தொழிலாகும்.
ஆனால், இந்த நிலையத்தை நீராதாரமே இல்லாத இடத்தில் அமைத்துள்ளனர். எனினும், திமுக ஆட்சி அமைந்த பின் இந்நிலையத்தை சீரிய முறையில் கட்டமைத்து, கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, துறை அமைச்சரை தலைவராகவும், தலைமைச் செயலரை துணைத் தலைவராகவும் கொண்ட திட்டகண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர் மின் அழுத்த கம்பிகள் பொருத்தும் பணி முடிக்கப்பட்டுள்ளது. டான்சி நிறுவனம் மூலம் அறையணிகள் கொள்முதல் முடிக்கப்பட்டு அவற்றைபொருத்தும் பணி நடைபெறுகிறது.
தேவைப்படும் பணியிடங்களை உரிய துறைகள் மூலம்நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்கமுதல்வர் அறிவுறுத்தியுள்ளபடி, பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு நிலையம்பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT