Published : 31 Jul 2024 06:05 AM
Last Updated : 31 Jul 2024 06:05 AM
சென்னை: அச்சம் காரணமாகத்தான் டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.
பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலதலைவர் அமர் பிரசாத் ரெட்டி, நேரு யுவகேந்திரா மையத்தின் தேசியதொண்டர் ஷாஜித் லோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள ‘கனெக்டிங் 1.4 பில்லியன்’ என்ற ஆங்கில நூலின் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நூலை வெளியிட முதல் பிரதியை சமூக சேவகர் ‘பாலம்’கல்யாணசுந்தரம் பெற்றுக்கொண் டார். தொடர்ந்து அண்ணாமலை பேசியதாவது:
இந்த நூல் ஒரு முக்கியமான நூல். காரணம், இது மோடியின் 10ஆண்டு கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், அவற்றால் ஏற்பட்ட வளர்ச்சி, மாற்றங்கள், தாக்கங்கள் குறித்து விரிவாக விவரிக்கிறது. ஜல்ஜீவன் திட்டம், ரேஷன்திட்டம், இளைஞர் வேலைவாய்ப்புதிட்டம், வடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை அலசுகிறது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். அவர் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி 2022, 2023 நிதிஆயோக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. நிதி ஆயோக் கூட்டத்தில்பங்கேற்க அவருக்கு அச்சம்.
அதனால்தான் அவர் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. பள்ளிசெல்ல குழந்தை மறுப்பதுபோல்தான் முதல்வரின் செயல் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, ‘‘பேசியும், எழுதியும் மக்களிடம்நல்ல மாற்றங்களை உருவாக்குவோம். காரணம் எழுத்து மக்களை மாற்றும். வார்த்தைகளுக்கு சக்திஉண்டு. 2026-ம் ஆண்டு தமிழகத்தில் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, இலை துளிர்க்கிறதோ இல்லையோ தாமரை நிச்சயம் மலர்ந்தே தீரும்’’ என்றார்.
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, நூலை வெளியிட்டுள்ள அல்லயன்ஸ் பதிப்பகத்தின் உரிமையாளர் சீனிவாசன் ஆகியோரும் வாழ்த்திப் பேசினர். விழாவில் பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், சக்கரவர்த்தி, கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT