Published : 31 Jul 2024 05:50 AM
Last Updated : 31 Jul 2024 05:50 AM
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக, ஆயிரம் விளக்கு அருகே ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள பழமையான ஸ்ரீ ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில்களின் ராஜ கோபுரத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, ‘ஆலயம் காப்போம்’ கூட்டமைப்பின் தலைவரான மயிலாப்பூரைச் சேர்ந்த பி.ஆர்.ரமணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெட்ரோரயில் நிர்வாகம் சார்பில் அரசுதலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி இத்திட்டம் தொடர்பான தொழில்நுட்ப நிபுணர் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
மேலும் அவர், நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள நபர்கள் லண்டன்,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 3 பெரிய சுரங்கப்பாதை திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடித்தவர்கள் என்றும், இத்திட்டத்தில் மாற்றம் செய்வது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை என அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
அதைப்பார்வையிட்ட நீதிபதிகள், அந்தக்கோயில் முன்பாக வரும்மெட்ரோ ரயில் நுழைவு வாயிலைவேறு பகுதிக்கு மாற்ற முடியுமா என்றுதான் கேட்டிருந்தோம். ஆனால்,இந்த அறிக்கையில் ரயில் நிலையத்தை மாற்றியமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை இந்த வழக்கில் நீதிமன்றம்அறிய முற்பட்ட விஷயங்கள் தொடர்பாக இந்த அறிக்கையில் எந்த விபரங்களும் இல்லை, என்றனர்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி, ‘ இந்தக் கோயில் நுாற்றாண்டு பழமையானது என்பதற்கான ஆவணங்கள் உள்ளன. ரயில் நிலையநுழைவு வாயிலை தொழில்நுட்ப ரீதியாக மாற்றுவது சாத்தியமில்லை எனக்கூறுவது ஏற்புடையதல்ல. கோயிலுக்கும், ராஜகோபுரத்துக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் மெட்ரோ ரயில் நுழைவு வாயிலை இடமாற்றம் செய்யுங்கள் என்றுதான் கூறுகிறோம்’ என்றார்.
அதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்தக்கோயில் பழமையான கோயில்எனில் அதற்கு எந்த சேதாரமும் இல்லாமல் திட்டம் மாற்றியமைக்கப்படும். நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஏற்கெனவே மூன்று கோயில்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மெட்ரோ தி்ட்டங்களில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
தொழி்ல்நுட்ப ரீதியாக கோயில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை ஆராய்ந்து ரயில் நிலைய நுழைவு வாயிலை மாற்ற முடியுமா எனஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம் என்றும். இதற்காக அந்தப்பகுதியை தானே நேரில் சென்றுபார்வையிடவுள்ளதாக கூறினார். அதையேற்ற நீதிபதிகள் விசாரணையை ஆக.2-க்கு தள்ளி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT