Published : 28 May 2018 01:17 PM
Last Updated : 28 May 2018 01:17 PM

திருவள்ளூரில் வங்கி லாக்கரை உடைத்து ரூ.6 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

திருவள்ளூரில் வங்கி லாக்கரை உடைத்து சுமார் ரூ.6 கோடி மதிப்புள்ள வாடிக்கையாளர்களின் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திருவள்ளூரில் உள்ள முக்கிய சாலையான ஜேஎன் சாலையில் தனியார் கட்டிடத்தின் முதல் தளத்தில் பேங்க் ஆப் இந்தியா வங்கி இயங்கி வருகிறது. தரைத்தளத்தில் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட் உள்ளது. பாங்க் ஆப் இந்தியா வங்கியில் லாக்கர் வசதியும் உண்டு. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாடிக்கையாளர்களின் நகைகள் இந்த வங்கியில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி வங்கி மூடப்பட்டிருந்தது. மீண்டும் வாரத்தின் முதல் நாளான இன்று திறக்கப்பட்டது. வங்கியை திறந்து உள்ளே சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தரைத்தளத்தில் பெரிய அளவில் சுவர் துளையிடப்பட்டிருந்தது. லாக்கர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. லாக்கரில் இருந்த நகைகளை ஆய்வு செய்ததில் ரூ.6 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கி இரண்டு நாள் விடுமுறை என்பதை பயன்படுத்தி இந்த கொள்ளை நடந்துள்ளது. கொள்ளையர்கள் கீழ் தளத்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் சனிக்கிழமை இரவே பதுங்கி ஞாயிற்றுக்கிழமை இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். கொள்ளையர்கள் எப்படி உள்ளே வந்தனர், எப்படி கொள்ளையடித்துவிட்டு வெளியே சென்றனர் என்பது மர்மமாகவே உள்ளது.

கொள்ளையர்களுக்கு வங்கியில் உள்ள ஊழியர்கள் யாராவது உதவினார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இதே பாணியில் சனி, ஞாயிறு விடுமுறையை பயன்படுத்தி வங்கி காவலர் சிலருடன் சேர்ந்து கொள்ளையடிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி நேரில் வந்து வங்கி அதிகாரிகளிடம் நகை கொள்ளை குறித்து விசாரணை நடத்தினார்.

.

கொள்ளை எப்போது நடந்தது நேற்றா? இன்றா? என்று கீழ்தளத்தில் உள்ள நீல்கிரிஸ் நெஸ்ட் சூப்பர் மார்க்கெட்டின் சிசிடிவி வீடியோ பதிவுகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்வம் தொடர்பாக திருவள்ளூர் நகர டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இதே சாலையில் நான்கைந்து கட்டிடம் தள்ளி அமைந்துள்ள ஆடிட்டர் இராமமூர்த்தி வீட்டில் தீரன் படப்பாணியில் முகமுடி கொள்ளையர்கள் வீட்டின் கதவை தட்டி ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு சொகுசு கார் மற்றும் 200 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.

அந்த சம்பவம் நிகழ்ந்த ஒருவாரத்தில் அதே சாலையில் மிகப்பெரும் கொள்ளை நடந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கியில் கொள்ளை நடந்ததை அறிந்த நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு திரண்டு உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x