Published : 29 May 2018 08:00 AM
Last Updated : 29 May 2018 08:00 AM

கோயம்பேடு சந்தையில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 9 டன் பழங்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 9 டன் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோயம்பேடு சந்தையில் கால்சியம் கார்பைடு கல் மூலமும், ரசாயன பவுடரை பயன்படுத்தியும் பழங்கள் செயற்கையாகப் பழுக்க வைக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

திடீர் சோதனை

இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழுவின் முதன்மை நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சதாசிவம் உட்பட 15 அதிகாரிகள் நேற்று அதிகாலை கோயம்பேடு சந்தையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, 58 கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அதில் 4 கடைகளில் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பதைக் கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து, அந்தக் கடைகளில் இருந்து ரசாயன முறையில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பப்பாளி 2 டன், மாம்பழங்கள் 7 டன் என மொத்தம் ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள பழங்கள், 3 கிலோ எத்திலின் பவுடர் ஆகியவற்றை அவர்கள் பறிமுதல் செய்து அழித்தனர். அதோடு, ரசாயன முறையில் பழங்களை பழுக்க வைத்த கடையையும் மூடினர்.

விதிமீறினால் அபராதம்

இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

பழங்களை விரைவாக பழுக்க வைத்து அதிக லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று செயற்கையான ரசாயன முறைகளை வியாபாரிகள் கையாள்கின்றனர். செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்யக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ரசாயன முறையில் பழுக்க வைத்த பழங்களை உண்பதால் வாந்தி, பேதி,நெஞ்சு எரிச்சல், குடற்புண், கண்களில் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

புகார் தெரிவிக்கலாம்

எனவே, பழங்கள் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டுள்ளது குறித்து அறிந்தால், பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x