

மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி, அவரது பெயரில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டதாக திமுக விளக்கம் அளித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டது.
"விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்..." என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட விநாயகர் ஓவியத்துக்கு சுமார் 3,000 லைக்குகளும், 250-க்கும் மேற்பட்ட ஷேர்களும் கிடைத்தன.
இந்த நிலையில், திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
"திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிரத்யேக இணையதளத்தில், அவர் விநாயகர் சதுர்த்தி நாளன்று வாழ்த்துக்களை தெரிவித்ததாக வந்துள்ளது.
மு.க.ஸ்டாலினின் இணையதளத்தை பராமரிக்கின்றவர்களில் சிலர் ஆர்வமிகுதியின் காரணமாக, எல்லோரும் தெரிவித்திருப்பதைப் போல மு.க.ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக வெளியிட்டுள்ளனர்.
இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.