ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: தாம்பரம் ரயில்வே கேண்டீன் உரிமையாளருக்கு சிபிசிஐடி சம்மன்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பணத்துடன் பிடிபட்ட நபர்கள்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பணத்துடன் பிடிபட்ட நபர்கள்.
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. முன்னதாக ஏப்ரல் 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.4 கோடி சிக்கியது. இந்தப் பணத்தை கொண்டு சென்றதாக பாஜக-வின் நெல்லை தொகுதி வேட்பாளரான நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களான திரு.வி.க.நகரைச் சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், ஸ்ரீவைகுண்டம் பெருமாள் ஆகியோரை தாம்பரம் போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், அந்தப் பணம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கைமாற்றப்பட்டு நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்தார். இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, பணத்துடன் பிடிபட்ட மூவர் மற்றும் நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோர் உட்பட மேலும் பலருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான நயினார் நாகேந்திரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதும் நயினார் நாகேந்திரன், பிடிபட்ட பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதுஒருபுறம் இருக்க சிபிசிஐடி போலீஸாரின் தொடர் விசாரணையில், ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மூலமாக கைமாறி உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளரை அழைத்து சிபிசிஐடி பிரிவு போலீஸார் ரகசிய விசாரணை நடத்தி உள்ளதாக தகவல் வெளியானது.

இதன் தொடர்ச்சியாக தாம்பரம் ரயில்வே கேண்டீன் உரிமையாளர் எனக் கூறப்படும் முஸ்தபாவை இன்று (30ம் தேதி) விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in