Published : 30 Jul 2024 04:25 AM
Last Updated : 30 Jul 2024 04:25 AM
சென்னை: திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்களில் கல்லூரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். வெவ்வேறு கல்லூரிகளில் படிக்கும் இந்த மாணவர்கள் இடையே `ரூட் தல' என்ற பெயரில் மோதல் போக்கு அவ்வப்போது ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் விதமாக கல்லூரிகளுக்கு சென்று ரயில்வே போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், ரயில் நிலையங்கள், ரயில்களில் மாணவர்களுக்கு இடையே எந்தவித மோதலும் ஏற்படாமல் இருக்க ரயில்வே போலீஸார், ஆர்.பி.எஃப். போலீஸாரின் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, ரயில்களில் படி மற்றும் ஜன்னல் பகுதியில் தொங்கியபடி பயணம் செய்வது, மொபைல் போன் பேசிக்கொண்டே ரயில்பாதையைக் கடப்பது போன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதலை தடுக்கும் வகையில், ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்யும் பணியை ரயில்வே போலீஸார் தொடங்கி உள்ளனர்.
இது குறித்து ரயில்வே போலீஸ்அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருத்தணி மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரலுக்கு ரயில்களில் பயணிக்கும் கல்லூரிமாணவர்கள் அடிக்கடி மோதலில்ஈடுபடுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, புதிய சட்டத்தில் கூடுதல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தவறான செயலில் தொடர்ந்து ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT