Published : 28 May 2018 08:48 AM
Last Updated : 28 May 2018 08:48 AM

சென்னை மெட்ரோ ரயிலில் 3 நாட்களில் 3 லட்சம் பேர் இலவச பயணம்: ஞாயிறு விடுமுறையை குதூகலத்துடன் கழித்த மக்கள்

சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று ஏராளமானோர் குடும்பத்தோடு பயணம் செய்து மகிழ்ந்தனர். கடந்த 3 நாட்களில் 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் தற்போது 35 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையே, மக்களிடம் மெட்ரோ ரயில் பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்ட்ரல் - விமான நிலையம், சின்னமலை - டிஎம்எஸ் இடையே 3 நாட்களுக்கு இலவச பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த 3 நாட்களாக மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தனர். நேற்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால், கடந்த 2 நாட்களைவிட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் 500-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் இங்கும் அங்குமாக பலமுறை பயணம் செய்து மகிழ்ந்தனர். பொதுமக்கள் சிலர் பயண அட்டை கட்டண சலுகை உள்ளிட்ட சலுகைகள் குறித்து அங்குள்ள அலுவலர்களிடம் ஆர்வத்துடன் கேட்டுச் சென்றனர்.

முதல் நாளில் 50 ஆயிரம் பேர், 2-வது நாளில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 500 பேர் பயணம் செய்தனர். மொத்தமாக கடந்த 3 நாட்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இலவசப் பயணம் மேற்கொண்டிருக்கலாம் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறினர்.

கட்டணம் குறைக்கப்படுமா?

மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில பயணிகள் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக சீனு, பார்வதி ஆகியோர் கூறும்போது, ‘‘மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று பத்திரிகைகளில் வந்த அறிவிப்புகளைப் பார்த்து வந்தோம். உலகத் தரத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் உருவாக்கப்பட்டு, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பலரும் பயனடையும் வகையில் கட்டணத்தை 20 சதவீதம் குறைத்தால் சிறப்பாக இருக்கும். இதில் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

சுற்றுலா போன்ற அனுபவம்

கவிராஜ், சிவக்குமார், சதீஷ் ஆகியோர் கூறும்போது, ‘‘மெட்ரோ ரயிலில் பயணம் செய்தது, விடுமுறையில் சுற்றுலாத் தலங்களுக்கு சென்றது போன்ற அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ, கால்டாக்ஸியை ஒப்பிடும்போது கட்டணம் நியாயமானதுதான். ஆனால், தினமும் செல்பவர்களின் வசதிக்காக மாதாந்திர, வாராந்திர சலுகை பாஸ்களை அறிமுகம் செய்ய வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x