கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 40 வார்டுகளுக்கு உயருகிறது குடிநீர் கட்டணம்!

கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 40 வார்டுகளுக்கு உயருகிறது குடிநீர் கட்டணம்!
Updated on
2 min read

கோவை: கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 40 வார்டுகளில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் சிறுவாணி, பில்லூர் 1, 2, 3, ஆழியாறு மற்றும் வடவள்ளி - கவுண்டம்பாளையம் ஆகிய கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. பில்லூர் 2, 3-வது திட்டங்களை தவிர்த்து, மீதம் உள்ள அனைத்து குடிநீர் திட்டங்களுக்காகவும் மாநகராட்சியின் சார்பில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு மாதம் ரூ.7.19 கோடி குடிநீர் கட்டணமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதேசமயம், மாநகராட்சி சார்பில் ஓராண்டுக்கு ரூ.49.97 கோடி மட்டுமே கட்டணமாக பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இவை தவிர, குடிநீர் அல்லாத மாற்றுப் பயன்பாடுகளுக்காக 2,600-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மாநகராட்சியின் பழைய 60 வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த 60 வார்டுகளில் கடந்த 2013-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் கட்டணம் பயன்பாட்டில் உள்ளது.

2011-ம் ஆண்டு மாநகராட்சியுடன் விளாங்குறிச்சி, காளப்பட்டி, கவுண்டம்பாளையம், வீரகேரளம், வடவள்ளி, குறிச்சி, குனியமுத்தூர், துடியலூர், சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு ஆகிய 11 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு 40 வார்டுகளாக ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த 40 வார்டுகளில் குடிநீர் கட்டணமாக வீட்டு உபயோக முறைக்கு மாதம் ரூ.30 முதல் ரூ.100 வரையும், வீட்டு உபயோகம் அல்லாத கட்டிடங்களுக்கு மாதம் ரூ.110 முதல் ரூ.200 வரையும் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணங்கள் மிக குறைவாக உள்ளதால், தற்போது புதிய கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, ‘‘வீட்டு உபயோக முறை கட்டிடங்களுக்கு மாதம் ரூ.100, இதில் 20 மிமீ விட்டத்துக்கு அதிகம் உள்ள குழாய் இணைப்புகளை கொண்ட வீடுகளுக்கு ரூ.900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகம் அல்லாத கட்டிடங்களுக்கு ரூ.525, அதில் 20 மிமீ விட்டத்துக்கு அதிகம் கொண்ட குழாய் இணைப்புகளுக்கு ரூ.1,350 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் கட்டணம் செலுத்துதல், மின் கட்டணம் பராமரிப்பு, கடனுக்கான அசல், வட்டித் தொகை போன்றவற்றை மாநகராட்சி திரும்பச் செலுத்த வேண்டியுள்ளதால், இணைப்புப்பகுதிகளில் 2013-ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட புதிய குடிநீர் கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மன்றக் கூட்டத்திலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது” என்றார்.

போத்தனூர் ஸ்ரீராம் நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளரும், சமூக செயல்பாட்டாளருமான கே.எஸ்.மோகன் கூறும்போது, ‘‘மாநகராட்சி இணைப்புப் பகுதிகளில் சாலைவசதி, சாக்கடை வசதி,தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இச்சூழலில், இணைப்புப் பகுதிகளில் குடிநீர் கட்டணத்தை மாநகராட்சி உயர்த்தியிருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத அடிப்படையில் பார்க்கும்போது இது சிறிய தொகையாக தெரியலாம், ஆனால் வருட அடிப்படையில், பயன்பாடு அடிப்படையில் பார்க்கும்போது இந்த கட்டண உயர்வு அதிகமானதே. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர். இக்கட்டண உயர்வை மாநகராட்சி திரும்பப் பெற வேண்டும்’’என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in