

டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாடுமுழுவதும் ‘தேசிய டெங்கு விழிப்புணர்வு நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, எழும்பூர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள், இந்திய குழந்தைகள் நலச்சங்க மருத்துவர்களுக்கான காய்ச்சல் சிகிச்சை குறித்த பயிலரங்கம் நடந்தது.
இதில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது: தமிழகத்தில் 2,800 அரசு மருத்துவமனைகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் தினசரி காய்ச்சல் கண்காணிப்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பெறப்படும் காய்ச்சல் நிலவரத்தை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன்பின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. காய்ச்சல் குணமடைய நிலவேம்பு குடிநீர், பப்பாளி, மலைவேம்பு இடைச்சாறு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கர் பேசினார்.