Published : 05 May 2018 11:39 AM
Last Updated : 05 May 2018 11:39 AM

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தக் கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் வருகின்ற 8 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக வரைவுத்திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மத்தியில் ஆளும் பாஜக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் வருகின்ற 8 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக வரைவுத்திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், அதனைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கவும் மற்றும் கர்நாடக காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி 4 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிடவும் முன்வர வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கும் மற்றும் காவிரி நதியிலிருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த மிக முக்கிய தீர்ப்பை மத்திய அரசு ஏற்று நடைமுறைப்படுத்தவில்லை. கர்நாடக காங்கிரஸ் அரசும் மதித்து செயல்படவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் தமிழகத்திற்கு உரிய காவிரி நதிநீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக்கிடக்கின்ற விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது.

 காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஏதோ காரணங்கள் கூறி பல முறை காலம் தாழ்த்தி வருகின்ற மத்திய அரசின் செயலும், காவிரி நதியிலிருந்து தமிழகத்துக்கு உரிய நீரை இன்னும் முழுமையாக திறந்துவிடாமல் வீண்பிடிவாதப் போக்கை கடைப்பிடித்து வருகின்ற கர்நாடக காங்கிரஸ் அரசின் செயலும் முற்றிலும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை வெளிப்படுத்தியிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கடந்த காலங்களில் அளித்த தீர்ப்பை மத்திய பாஜக அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் ஏற்றுக்கொண்டு, மதிப்பளித்து, நீதிக்கு தலைவணங்கி செயல்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே செயல்படுத்த காலம் தாழ்த்துவதும், தமிழகத்துக்கு உரிய காவிரி நதிநீரை திறந்துவிடாமல் இருப்பதும் தமிழகத்தை பின்னுக்கு தள்ளக்கூடிய இரண்டு தேசிய கட்சிகளின் கூட்டுச்சதி. இதனையெல்லாம் தமிழக மக்கள் உற்று கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான தக்க பதிலை தக்க நேரத்தில் தமிழக மக்கள் வெளிப்படுத்துவார்கள்.

குறிப்பாக தமிழக அரசும் காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்துக்கு உரிய உரிமையை, நியாயத்தை பெற்றுத்தர மேற்கொள்ளும் மெத்தனப்போக்கை கைவிட்டு, அதிக முக்கியத்துவம் கொடுத்து, நடவடிக்கை எடுத்து தமிழக மக்கள் நலன் காக்க வேண்டும்.

எனவே மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் வருகின்ற 8 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக வரைவுத்திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், அதனைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கவும் மற்றும் கர்நாடக காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி 4 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிடவும் முன்வர வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x