Published : 24 May 2018 07:54 AM
Last Updated : 24 May 2018 07:54 AM

100 நாட்கள் அமைதியாக நடந்த ஸ்டெர்லைட் போராட்டம் கலவரமானது ஏன்?;வெளியாட்கள் ஊடுருவலே காரணம்: கலவரக்காரர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என டிஐஜி வேண்டுகோள்

தூத்துக்குடியில் 100 நாட்களாக அமைதியாக நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் வெடித்ததற்கும், உயிர்களை பலிவாங்கியதற்கும் அரசுத் தரப்பும், போராட்டக்காரர்களும் தத்தம் நியாயங்களை தெரிவிக்கின்றனர். எனினும், வெளியாட்கள் ஊடுருவலே கடந்த 2 நாட்களிலும் நீடித்த கலவரத்துக்கு காரணமாக இருக்கிறது.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் கூறி பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆலை விரிவாக்கப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

தொடர் போராட்டங்கள்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இங்குள்ள அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த 12.2.2018-ம் தேதி அறவழிப் போராட்டம் தொடங்கப்பட்டது. இப்போராட்டம் தனியார் அமைப்புகளாலும், அரசியல் கட்சிகளாலும் திசை திருப்பப்பட்டுவிடக் கூடாது என்பதில், இக்கிராம மக்கள் கருத்தாய் இருந்தனர். தொடக்கத்தில் எந்த அரசியல் கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகளையும் போராட்டகளத்துக்கு அனுமதிக்கவில்லை. நாளடைவில் ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்பின் தலைவர்களும் இங்குவந்து தங்கள் ஆதரவை அவ்வப்போது தெரிவித்தனர்.

தன்னெழுச்சி போராட்டம்

கடந்த 24.2.2018-ம் தேதி ஜல்லிக்கட்டு போராட்டத்தைப்போல், அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளின் துணையின்றி தன்னெழுச்சியாக தூத்துக்குடியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு அறவழிப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் தூத்துக்குடி ஸ்தம்பித்தது. வியாபாரிகளும் கடைகளை அடைத்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வந்த நாட்களில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகளும் தன்னெழுச்சியாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினர். இவை அனைத்தும் எவ்வித வன்முறையும் இல்லாமல் நடந்து முடிந்திருந்தன.

ஆனால், நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்தின் 144 தடை உத்தரவையும் மீறி ஸ்டெர்லைட் எதிர்ப்பு முற்றுகை போராட்டத்துக்கு மக்கள் திரண்டனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த போராட்டமும் அமைதியாக முடியும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக கலவரமாக மாறியது.

தூண்டியது ஒருசிலர்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்தவர்கள், அங்கேயே அமைதியாக தர்ணா போராட்டத்தை தொடர்ந்திருந்தால் பிரச்சினை இந்த அளவுக்கு பூதாகரமாக ஆகியிருக்காது. ஊர்வலமாக வந்தவர்களில் சிலர் வன்முறையை கையில் எடுத்ததுதான் துப்பாக்கி சூடுவரை கொண்டு சென்றிருக்கிறது.

ஆம்புலன்ஸ் மீதுகூட தாக்குதல்

போர்க்காலங்களில்கூட ஆம்புலன்ஸ்களை யாரும் தாக்கமாட்டார்கள். ஆனால் இங்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தாக்கப்பட்டன. ஆட்சியர் அலுவலகத்தினுள் நுழையும்போது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த அமமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சவுந்தரராஜனும், அவரது ஆதரவாளர்களும் தாக்கப்பட்டனர்.

இதனால், போராட்டக்காரர்கள் மத்தியில் வெளியாட்கள் ஊடுருவியிருந்ததையும், அறவழி போராட்டத்துக்கு வந்த சாதாரண பெண்களையும், மீனவர்களையும், அவர்கள் தவறாக வழிநடத்திவிட்டதையும் போலீஸார் சுட்டிக்காட்டுகிறார்கள். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் யாரும் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அறவழியில் 100 நாட்களாக வெற்றிகரமாக போராட்டம் நடத்தியிருந்த மக்கள், செலவுக்காக யாரிடமும்போய் நிற்கவில்லை. அவர்களே தங்கள் செலவுகளை செய்திருந்தனர். ஆனால், இந்த முற்றுகை போராட்டத்துக்காக சில அமைப்பினர் பொதுமக்களிடம் உண்டியல் வசூலில் ஈடுபட்டிருந்ததை தூத்துக்குடி மாநகர மக்கள் நினைவுபடுத்துகிறார்கள்.

ஆட்சியரை தடுத்த டிஐஜி

கோவில்பட்டியில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ், தூத்துக்குடியில் நடைபெற்ற ஊர்வலம், வன்முறை குறித்து கேள்விப்பட்டதும், அங்கிருந்து தூத்துக்குடிக்கு விரைந்து வந்து கொண்டிருந்தார். ஆனால் அவரை ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவேண்டாம் என்று திருநெல்வேலி சரக டிஐஜி கபில்குமார் சரத்கார் தகவல் தெரிவித்ததால், ஓட்டப்பிடாரத்துக்கு சென்று அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தங்கினார். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரன், திருநெல்வேலி மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமார் ஆகியோர் ஊர்வல பாதையான 3-வது மைல் பாலத்தின் அருகே பாதுகாப்பு பணியில் இருந்தனர். அவர்களும் விரட்டியடிக்கப்பட்டனர்.

2-வது நாளாக

முதல்நாள் வன்முறைக்குப்பிறகு 2-வது நாளிலும் காவல்துறை வாகனங்களுக்கு தீவைத்தது, கல்வீசி தாக்கியது போன்ற சம்பவங்களும் வெளியாட்களின் ஊடுருவலை உறுதி செய்தன. பிரதான சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிந்த போலீஸார் மீது ஆங்காங்கே கட்டிடங்களில் மறைந்திருந்த இளைஞர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதும், அண்ணாநகர், பிரையன்ட் நகர் பகுதிகளில் தெருக்களில் மறைந்து நின்றவர்கள் பலர் காவல்துறை மீது தாக்குதல் நடத்தியதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. வெளியாட்கள் பலர் தூத்துக்குடிக்கு வந்து தங்கியிருந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இதை மக்கள் மத்தியில் ஒலிபெருக்கிகள் மூலமும் காவல்துறையினர் சொல்லி வருகிறார்கள்.

அரசின் மெத்தனம்

அதேநேரத்தில் காவல்துறையினரின் அத்துமீறல், வன்முறையால்தான் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகிவிட்டதாக போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழப்புகளுக்குப்பின் அரசுத் தரப்பில் சொல்லும் நியாயங்களையும், நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை செயல்படாமல் இருக்க அரசுத் தரப்பு வாதிட்டிருப்பதையும் முன்னரே தெரிவித்திருந்தால் பிரச்சினை பெரிதாகியிருக்காது.

டிஐஜி வேண்டுகோள்

நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சரத்கார் கூறும்போது, ``நகரில் வெளியாட்கள் ஊடுருவியுள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு வந்துள்ள வெளியாட்கள் குறித்தும், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அதுகுறித்தும், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

தொடர் வன்முறை சம்பவங்களால் தூத்துக்குடி மாநகரத்தின் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு, வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள். இந்நிலை நீடிக்காமல் கலவரம் செய்யும் நோக்கத்தோடு தூத்துக்குடிக்கு ஊடுருவியவர்களை கைது செய்ய காவல்துறை முழுவீச்சில் செயல்பட வேண்டும் என்பதே இம்மாநகர மக்களின் கோரிக்கை.

“ 5 வருடங்களுக்கு யார் ஆட்சி செய்தாலும், முடிந்தவரைக்கும் அவருக்கு ஒத்துழையுங்கள்” - விஜய் ஆண்டனி வீடியோ பேட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x