“ஒரு மாநில முதல்வரை நடத்தும் விதமா இது?” - மம்தா விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

“ஒரு மாநில முதல்வரை நடத்தும் விதமா இது?” - மம்தா விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச முடிந்தது என்றும், பிறகு தனது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது என்றும் கூறி மேற்கு வங்க முதல்வர் வெளிநடப்பு செய்திருந்தார். இதற்கு “ஒரு மாநிலத்தின் முதல்வரை நடத்தும் விதமா இது?” என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் வெளிநடப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “ஒரு மாநிலத்தின் முதல்வரை நடத்தும் விதமா இது? ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் ஓர் அங்கம் என்பதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். கூட்டாட்சியில், அனைவரது கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்,” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

வெளிநடப்பும், விளக்கமும்: முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 9-வது ஆட்சிக்குழு கூட்டம் புதுடெல்லியில் இன்று (ஜூலை 27) காலை தொடங்கியது. இதில், மத்திய அமைச்சரகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கெண்டனர். இக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச முடிந்தது என்றும், பிறகு தனது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது என்றும் கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்தார்.

நிதி ஆயாக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “நிதி ஆயோக் கூட்டத்தில் பேசும்போது, மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சமாக நடத்தக் கூடாது என கூறினேன். தொடர்ந்து பேச விரும்பினேன். ஆனால், 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். எனக்கு முன் பேசியவர்கள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினார்கள்.

எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்றேன். இருந்தும், என்னைப் பேச அனுமதிக்கவில்லை. நான் பேசிக்கொண்டிருந்தபோதே எனது மைக்கை ஆஃப் செய்துவிட்டார்கள். ஏன் என்னை தடுத்தீர்கள், ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்றேன். இந்த கூட்டத்தில் நான் பங்கேற்றதற்காக நீங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். மாறாக, உங்கள் கட்சிக்கும், உங்கள் அரசுக்குமே அதிக வாய்ப்புகளைக் கொடுக்கிறீர்கள். எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்ற போதும், நீங்கள் என்னை பேசவிடாமல் தடுக்கிறீர்கள். இது வங்கத்தை மட்டுமல்ல, அனைத்து மாநிலக் கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில், “ஒரு மாநிலத்தின் முதல்வரை நடத்தும் விதமா இது?” என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in