“கட்சி வளர வேண்டும் என்றே பேசினேன்” - ஈவிகேஎஸ் விமர்சனத்துக்கு கார்த்தி சிதம்பரம் விளக்கம்

கார்த்தி சிதம்பரம் | கோப்புப்படம்
கார்த்தி சிதம்பரம் | கோப்புப்படம்
Updated on
1 min read

தேவகோட்டை: “காங்கிரஸ் கட்சி வளர வேண்டும் என நான் சொன்னதை நாட்டுக்குக் கேடு என்கிறார் ஈவிகேஎஸ்.இளங்கோவன்” என்று சிவகங்கை காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

“கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக திமுகவிடன் கூனிக் குறுகி நிற்க வேண்டியதில்லை” என அண்மையில் புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரம் பேசி இருந்தார். இதற்கு தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் எம்எல்ஏ, “திமுகவினர் வேலை செய்திருக்காவிட்டால் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெபாசிட் தொகை கிடைத்திருக்குமா? என்பதுகூட சந்தேகம்தான்” என விமர்சனம் செய்திருந்தார்.

இளங்கோவனின் பேட்டி காங்கிரஸ் கட்சிக்குள் கலவரத்தை உண்டாக்கி இருக்கும் நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “ஜூலை 19-ம் தேதி புதுக்கோட்டையிலும், ஜூலை 20-ம் தேதி சிவகங்கையிலும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியபோது மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் இருந்தனர்.அப்போது பேசியதற்கு ஜூலை 26-ம் தேதி ஈவிகேஎஸ். இளங்கோவன் பேட்டி அளித்தது வியப்பாக உள்ளது.

அதில் நான் என்ன பேசினேன் என்பதை அவர் கேட்டாரா? என்பதே சந்தேகமாக உள்ளது. அவர் மூத்த தலைவர். கட்சி வளர வேண்டும் என்று நான் சொன்னதை நாட்டுக்குக் கேடு என்று சொல்கிறார். அவரை விமர்சனம் செய்ய நான் தயாராக இல்லை. நான் பேசியது சரியா? தவறா? என்பதை கட்சி தொண்டர்களிடம் கேளுங்கள். மேடையில் இருந்த கட்சி தலைவர்களுக்கும் தெரியும். நான் கூட்டணி வேண்டாம் என்று பேசவில்லை. கூட்டணியால் தான் வெற்றி பெற்றேன் என்று தான் பேசினேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in