

சென்னை: சரிவர செயல்படாத நிர்வாகிகளின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்படும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் தோல்வி குறித்து மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் பொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று திருப்பூர் மற்றும் கடலூர் மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் பேசும்போது, ‘கூட்டணி பலமாக அமைத்திருந்தால் நாம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கலாம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க வேண்டும்’ என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் பழனிசாமி பேசும்போது, கூட்டணி விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நிர்வாகிகள் அதுகுறித்து கவலைப்பட வேண்டாம். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிக்கு 1 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம். கடுமையாக உழைத்தால் மட்டுமே சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி கிடைக்கும். அதற்கு கிராமம் கிராமமாகச் சென்று கட்சியில் அதிக அளவில் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அடுத்த 2 ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டும். சரியாகசெயல்படாத நிர்வாகிகளின் பொறுப்புகள் பறிக்கப்படும் என்றுஅறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.