Published : 27 Jul 2024 03:32 AM
Last Updated : 27 Jul 2024 03:32 AM
தருமபுரி/மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இதையடுத்து கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 62 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 95 ஆயிரம் கனஅடியாகவும், இரவு 7.30 மணியளவில் ஒரு லட்சம் கனஅடியாகவும் உயர்ந்தது.
இதனால் ஆற்றில் இருகரைத்தொட்டு தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இரு தினங்களுக்கு முன்பு நீர்வரத்து சரிந்ததால் பிரதான அருவி, சினி ஃபால்ஸ், ஐந்தருவி ஆகியவை வெளியில் தெரியத் தொடங்கின. ஆனால், தற்போது மீண்டும் அருவிகள் தண்ணீரில் மூழ்கின.
ஒகேனக்கல் ஆலம்பாடி பகுதியில், ஆற்றோரம் பல்வேறு மொழிகளில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒகேனக்கல் முதல் நாகமரை வரையிலான ஆற்றோரப் பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும்,ஆற்றோரங்களிலும், தாழ்வானப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் பென்னாகரம் அடுத்தமடம் பகுதி சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.
100 அடியை எட்டுகிறது: மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 45,598 கனஅடியாக இருந்த நீர்வரத்து இரவு81,552 கனஅடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர்தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று காலை 92.62 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இரவு95.50 அடியாகவும், நீர் இருப்பு 55.69 டிஎம்சியில் இருந்து59.17 டிஎம்சியாகவும் அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, "கர்நாடக அணைகளில் இருந்து அதிகஅளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் நாளை (இன்று) மாலைக்குள் நீர்மட்டம் 100 அடியை எட்டி விடும். டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்யும்" என்றனர்.
9 மாவட்டங்களுக்கு... மேட்டூர் அணைக்கு நீர்வரத்துஅதிகரித்துள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு, மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், "கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட 83,000 கனஅடி நீர் ஒரே நாளில் மேட்டூர்அணையை வந்தடையும். எனவே,கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், காவிரிக் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வருவாய்த் துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியான கோட்டையூர், செட்டிப்பட்டி, பண்ணவாடி, கோவிந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மீன் பிடிக்கவோ, பரிசல் இயக்கவோ, துணி துவைக்கவோ பொதுமக்கள் செல்லக்கூடாது என்று வருவாய்த் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT