Last Updated : 30 May, 2018 03:41 PM

 

Published : 30 May 2018 03:41 PM
Last Updated : 30 May 2018 03:41 PM

மதுரை ஆதீனம் மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை ஆதீனம் மடத்துக்குள் நித்யானந்தம் நுழைய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி பிள்ளைகள் அறக்கட்டளை தலைவர் எம்.ஜெகதலபிரதாபன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''மதுரை ஆதீனம் மடத்தையும், ஆதீனத்தின் சொத்துகளையும் கைப்பற்ற நித்யானந்தா திட்டமிட்டுள்ளார். இதனால் நித்யானந்தா மடத்துக்குள் நுழைய போலீஸ் பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். நித்யானந்தாவுக்கு அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே மதுரை ஆதீனம் மடத்துக்குள் நுழையவும், அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்து, மதுரை ஆதீனம் மடத்துக்குள்ளும், மதுரை ஆதீன நிர்வாகத்துக்குட்பட்ட கோயில்களிலும் நித்யானந்தா நுழைய நிரந்தர தடை விதித்து கடந்த மார்ச் 5-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்தத் தடையை நீக்கக் கோரி நித்யானந்தா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “அறநிலையத்துறை விவகாரங்களில் தனிநபர்கள் பொதுநல மனு தாக்கல் செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை தனி நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. மதுரை ஆதீனம் மடம் தொடர்பாக இரு வழக்குகளில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளை தனி நீதிபதி தவறுதலாகப் புரிந்துகொண்டுள்ளார். எனது தரப்பில் தெரிவிக்கப்பட்ட சட்ட ஆதாரங்களை தனி நீதிபதி ஏற்கவில்லை. ஆதீனத்துக்குள் மட்டும் இல்லாமல் ஆதீன மடத்துக்குச் சொந்தமான அனைத்து கோயில்களுக்கும் செல்லக்கூடாது என்ற உத்தரவு அடிப்படை உரிமையை மீறுவதாகும். எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, மதுரை ஆதீனம் மடத்துக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்” என்று கேட்கப்பட்ட்து.

இந்த மனு நீதிபதி முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x