

திண்டுக்கல்: காங்கிரஸ் கட்சியினரின் கருத்துரிமையில் தலையிடுவதில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
இன்று திண்டுக்கல் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், "திமுக கூட்டணியில் இருப்பதற்காக நாம் கூனிக்குறுகிப் போவதில்லை” என கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசியது குறித்து கேட்டதற்கு, "காங்கிரஸ் கட்சியினரின் கருத்துரிமையில் நாம் தலையிடுவதில்லை. தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்த தேர்தலில் அனைவரும் வந்து சேர்ந்து விடுவார்கள். கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வரலாம். இண்டியா கூட்டணியை உருவாக்கி 40-க்கு 40 வெற்றி பெற்று இமாலய சாதனை படைத்துள்ளது திமுக" என அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், "பழநி கிரிவலப் பாதையை மக்களின் வசதிக்காக ஒழுங்குப்படுத்தி உள்ளனர். தற்போது வியாபாரிகள், பொது மக்களை அழைத்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து அதன் மூலம் பேசித் தீர்வு காணலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெற்றுள்ளதாகச் சொல்லப்படும் ரூ.4 கோடி முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. முழுமையான விசாரணைக்கு பின்பு தவறு யார் செய்திருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் கூறினார்.