“இடஒதுக்கீடு போராட்ட வடிவம், தேதி குறித்து விரைவில் அறிவிப்பு” - ராமதாஸ் தகவல்

“இடஒதுக்கீடு போராட்ட வடிவம், தேதி குறித்து விரைவில் அறிவிப்பு” - ராமதாஸ் தகவல்
Updated on
2 min read

விழுப்புரம்: இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெறும் தேதி, போராட்டத்தின் வடிவம் குறித்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் மின்வாரியம் நஷ்டத்தைத்தான் சொல்கிறது. ரூ.18,400 கோடி கூடுதல் வாருவாய் கிடைத்தும் ரூ.10 ஆயிரம் கோடியாக நஷ்டம் அதிகரித்துள்ளது.

2022-ம் ஆண்டு ரூ. 36,500 கோடியும், 2023-ம் ஆண்டு வணிக நிறுவனங்கள் மூலம் ரூ.34 ஆயிரம் கோடியும் கிடைத்தும் மின்வாரியத்தில் ரூ.3,420 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இதன் மூலம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பது தெரியவருகிறது. ஒவ்வொரு முறையும் மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் ரூ.2.400 கோடி கூடுதல் வருவாய் கிடைப்பதாக அரசு கூறுகிறது. கட்டண உயர்வுக்குப் பின்னும் மின் வாரியம் ஏன் நஷ்டத்தில் உள்ளது என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டம் குறித்த வடிவம், தேதி குறித்து முடிவு செய்ய கூட்டுப் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும். அதன் பிறகு, போராட்ட வடிவம், தேதி குறித்து முறைப்படி அறிவிக்கப்படும். திண்டிவனம் - நகரி ரயில் பாதை பணிகளுக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதைக்கு 696 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி கொடுக்கவேண்டும். கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்திற்கு ரூ.205 கோடி ஒதுக்கி இருப்பது போதுமானதல்ல.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியை கடந்துவிட்டது. இனியாவது குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவது குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, மணல் கொள்ளை குறித்து தகவல் தரும் பொதுமக்கள் மிரட்டப்படுகின்றனர்.

தமிழகத்தில் கரும்பு சாகுபடி படிப்படியாக குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் தமிழக சர்க்கரை ஆலைகளை இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்படும். இதை தடுக்க கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதற்கு முந்தைய காலங்களில் பள்ளி மேலாண்மை குழுக்களில் பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. அரசுத்துறையின் தற்காலிகப் பணிகளுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அமைப்புசாரா தினக்கூலி தொழிலாளர்களுக்கு தினமும் ரூ.600 வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.200 வழங்குவது தொழிலாளர் விரோத போக்காகும்.

பட்ஜெட் நிதி ஒதுக்குவதில் மாநிலங்களுக்குள் பாரபட்சம் காட்டக்கூடாது. தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வாங்கியும். ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதும் சுரண்டலே” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in