

சென்னை: வங்கதேசத்தில் இருந்து மேலும் 42 தமிழக மாணவர்கள் சென்னை வந்தனர். வங்கதேசத்தில் வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு தொடர்பாக நடைபெறும் போராட்டம் மற்றும் கலவரம் காரணமாக, அந்நாட்டில் படித்துக் கொண்டிருக்கும் தமிழக மாணவர்கள் சிக்கித்தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலம், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து மீட்புப் பணி நடைபெறுகிறது.
வாட்ஸ்-அப் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அங்குள்ள தமிழ் மாணவர்கள் ஒருங்கிணைத்து, மீட்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு 42 மாணவர்கள், கொல்கத்தா, குவஹாட்டி பகுதிகளிலிருந்து விமானங்களில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
சென்னை விமான நிலையம் வந்த மாணவர்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், ``வங்கதேசத்தில் இருக்கும் தமிழ் மாணவர்களை மீட்டு, அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடர்ந்து4 நாட்களாக நடைபெற்று வருகிறது.
கடந்த 21-ம் தேதி 49 மாணவர்களும், 22-ம்தேதி 82 மாணவர்களும், 23-ம் தேதி 35மாணவர்களும், இப்போது 42 மாணவர்கள் என மொத்தம் 208 மாணவர்களை அழைத்து வந்துள்ளோம்''என்றார்.