

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் அசூர் செல்லும் சாலையின் குறுக்கே தஞ்சாவூர்-விக்கிரவாண்டி புறவழிச் சாலைக்காக அமைக்கப்பட்ட பாலத்தின் கீழ்பகுதி திறந்தவெளி ‘பார்’ ஆக மாறியுள்ளதால் அவ்வழியாக செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கும்பகோணத்தில் இருந்து அசூர் செல்லும் சாலையின் குறுக்கே தஞ்சாவூர்-விக்கிரவாண்டி புறவழிச் சாலைக்காக உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில், பாலத்தின் இருபுறங்களிலும் அணுகுசாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாலத்தின் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து குடிமகன்கள், மதுபானம் வாங்கி வந்து, பாலத்தின் கீழ் அருந்துகின்றனர். இதனால் அந்தப் பாலம் வழியாகச் செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்தப் பகுதியில் மது அருந்துவதை தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ராஜ.கண்ணன் கூறியது: அசூரில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து குடிமகன்கள், மதுபானங்களை வாங்கி வந்து, பாலத்தின் கீழ் தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி மது அருந்துகிறார்கள். மதுக்கடை திறக்கும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை அந்தப் பகுதி முழுவதையும் குடிமகன்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.
சிலர், அதே இடத்தில் மதுபான பாட்டில்களை உடைத்து விடுவதால், அந்தப் பகுதி முழுவதும் கண்ணாடி துண்டுகள் சிதறிக் கிடக்கின்றன. இதனால், அந்த வழியாக மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டி உள்ளது. எனவே, இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.