பள்ளங்களால் நிறைந்த சாலைகள் - நாள்தோறும் அவதியில் மடிப்பாக்கம், புழுதிவாக்கம் மக்கள்!

லீலாவதி அம்மாள் தெரு. | படங்கள் எம்.முத்துகணேஷ்
லீலாவதி அம்மாள் தெரு. | படங்கள் எம்.முத்துகணேஷ்
Updated on
2 min read

சென்னை மாநகராட்சியின் தெற்கில் மிகவும் முக்கிய நகரான மடிப்பாக்கம் குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியாகும். இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அவற்றில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசுத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். 14-வதுமண்டலத்துக்கு (பெருங்குடி) உட்பட்ட பகுதிகளில் வரும் மடிப்பாக்கத்தில் பல்வேறு தெருக்களில் நீண்டகாலமாக சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள், வாகன ஒட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக மடிப்பாக்கம் பிரதான சாலை, சீதக்காதி தெரு, பாரத் தெரு, சரஸ்வதி தெரு, லீலாவதி அம்மாள் தெரு, பகத்சிங் தெரு, ராஜேஸ்வரி தெரு, புழுதிவாக்கம் பிரதான சாலை, மடிப்பாக்கம்-மேடவாக்கம் பிரதான சாலை, ஐய்யப்பன் கோயில் தெரு உட்பட பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஒட்டிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அவ்வப்போது சாலை பள்ளங்களில் பலர் விழுந்து விபத்துகள் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:

பிரியங்கா, மென் பொறியாளர்: மடிப்பாக்கம் பகுதிகளில் தற்போது மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனால் மேடவாக்கம் - மடிப்பாக்கம் பிரதான சாலை பல்வேறு இடங்களில் சேதமடைந்து உள்ளது. இவற்றை முறையாக சீரமைப்பு செய்யாததால் வாகனங்களில் சென்றுவர சிரமமாக இருக்கிறது. முதியோர் ஒருமுறை இந்த சாலையில் பயணித்தால் முதுகு வலி வந்துவிடும் அந்த அளவுக்கு மோசமாக உள்ளது. சில பகுதிகளில் சாலையோரம் சரளை கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவையும் சாலைக்கு வந்துவிடுவதால் வாகனங்களை எளிதாக ஒட்டிச் செல்ல முடிவதில்லை. மேலும், மழை பெய்தால் எங்குபள்ளம் இருக்கும் எனதெரியாது. தினமும் அச்சத்துடனேயே வாகனங்களை ஒட்ட வேண்டியுள்ளது. எனவே, சாலைகளை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரஸ்வதி தெரு
சரஸ்வதி தெரு

ரஞ்சித், மளிகை கடை: மடிப்பாக்கம் பிரதானசாலை மற்றும் பொன்னியம்மன் கோயிலை ஒட்டிய தெருக்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பெயரளவுக்கு சில தெருக்களில் மட்டும் சாலைகள போடப்பட்டுள்ளன. இரவில் சில தெருக்களில் மின்விளக்குகள் செயல்படாது. எனவே, இந்த பகுதிகளில் உள்ள தெருக்களில் பயணிப்பதே பெரும் சவாலாக உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே மாநகராட்சி விரைந்து சாலைகளை சீரமைக்க வேண்டும்.

அருள் பிரகாசம், ஒய்வூதியர்: மடிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற தெருக்களில் அமைக்கப்படும் சாலைகள் அனைத்தும் கடந்த ஓராண்டுக்குள் அமைக்கப்பட்டவை தான். ஆனால், அவை தரமற்றவையாக இருப்பதால் விரைந்து காலாவதியாகிவிடுகின்றன.

தெருக்களில் அமைக்கப்படும் சாலைகள் முறையான திட்டமிடலுடன் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் அதன்பலன் முழுமையாக பொது மக்களை சென்றடைவதில்லை. மேலும், குடியிருப்புகள் குறைவாக உள்ள சிறிய தெருக்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. எனவே, சாலை அமைத்தல் போன்ற பணிகளை அரசியல் கட்சியினருக்கு வழங்காமல் தகுதியான நிறுவனங்களுக்கு வழங்கி செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மடிப்பாக்கம் மற்றும் புழுதிவாக்கம் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலை அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் வேலைகளை செய்ய முடிவதில்லை. தற்போது திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல், மடிப்பாக்கம் - மேடவாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, தேவைக்கேற்ப தற்காலிகமாக பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in