பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அன்புமணி, தினகரன் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அன்புமணி, தினகரன் வாழ்த்து
Updated on
2 min read

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் 86-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு முதல்வர் ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வரின் வாழ்த்துச் செய்தியில், “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் அன்புமணி தனது எக்ஸ் பக்கத்தில், “அருஞ்சொல் பொருள் அகராதியில் சமூக நீதி என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் குலத்தின் முதல்வன் ராமதாஸுக்கு இன்று 86-ஆம் பிறந்தநாள். அவரால் வாழ்வு பெற்ற கோடிக்கணக்கான சொந்தங்களில் ஒருவனாக ஈடு இணையற்ற அந்த பெருந்தலைவனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆயிரம் பிறை கண்டும் இன்னும் ஓய்வு என்பதை அறியாமல் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்துக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பிதாமகன் அவர். இளம் வயதில் கல்விக்காக அவர் பட்ட பாடுகள் தான், எனக்கிருந்த தடைகள் வேறு எவருக்கும் வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில், இன்றைய தலைமுறை எளிதாக கல்வி கற்கத் தேவையான அனைத்தையும் போராடி பெற்றுத்தர வைத்திருக்கிறது அந்த பெரிய மனிதரை. 6 வகையான இட ஒதுக்கீட்டில் தொடங்கி தமிழக மாணவர்களை முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த நுழைவுத்தேர்வை ரத்து செய்தது வரை தமிழ்நாட்டில் சமூக நீதிக்கான புரட்சிகளை தலைமையேற்று சாதித்த சமூக நீதிக் காவலர் அவர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகவும், 35வயதில் இந்தியாவின் இளம் சுகாதாரத்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் போராளியாகவும் பொறுப்பேற்று நாட்டு மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்தது, அதற்காக பல்வேறு விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றது உள்ளிட்ட நான் பெற்ற பேறுகள் அனைத்திற்கும் காரணம் நீங்கள் தான் அய்யா. என்னைப் போலவே, உலகின் 140 நாடுகளில் பல்வேறு பெரும் பொறுப்புகளை வகித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு காரணமான தனிப்பெரும் நாயகன் ராமதாஸ்.

ஆனாலும், அவருக்கும் நிறைவேறாத சில ஆசைகள் இன்னும் இருக்கின்றன. சமூக நீதி, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் சார்ந்த அவரின் அனைத்துக் கனவுகளையும் நனவாக்குவதற்காக கடுமையாக உழைக்க இந்த நன்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்" என்று கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு அன்புமணி விடுத்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான மருத்துவர் ராமதாஸுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழக மக்களின் உரிமை சார்ந்த போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வரும் மருத்துவர் ராமதாஸ் பூரண உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மக்கள் பணிகளை தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 86-வது பிறந்த நாளையொட்டி 86 மரக் கன்றுகளை நட்டு ராமதாஸ் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அறத்தில் சிறந்தது மரம் நடுவது. அந்த வகையில் இந்நாளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இங்கு 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். பசுமையான சூழலே நிலவ வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in