Published : 25 Jul 2024 06:30 AM
Last Updated : 25 Jul 2024 06:30 AM

தமிழகத்தில் புதிதாக 2.80 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்: அடுத்த மாதம் விநியோகிக்க அரசு திட்டம்

சென்னை: தமிழகத்தில் உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறைகளால் நிர்வகிக்கப்படும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டு, அதன்படி பணிகள் நடைபெற்று வந்தன.

இதற்கிடையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டதால், குடும்ப அட்டை கேட்டு அதிகளவில் விண்ணப்பங்கள் குவிந்தன. இதையடுத்து, புதிய அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் பெரும்பான்மை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.

எனவே, புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள், தமிழ்நாடு மின்னாளுமை முகமை மூலம் பரிசீலிக்கப்பட்டது. தொடர்ந்து, கள ஆய்வுப்பணியும் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் 2.80 லட்சம் புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இவர்களுக்கு அடுத்த மாதம் முதல் குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, 2021-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் குடும்ப அட்டைகள் எண்ணிக்கை 2.10 கோடியாக இருந்தது, இது 2022-ம் ஆண்டில் 2.20 கோடியாக அதிகரித்தது. இந்தாண்டு நிலவரப்படி, 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 குடும்ப அட்டைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்கள் புதிய ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளன. தற்போது ஆய்வு பணிகள் தொடங்கின. அடுத்த மாதம் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x