Published : 25 Jul 2024 06:13 AM
Last Updated : 25 Jul 2024 06:13 AM
சென்னை: மேகேதாட்டு திட்டத்துக்காக கர்நாடக அரசுக்கு எவ்வித அனுமதியும் இதுவரை வழங்கவில்லை என்று மத்திய ஜல்சக்தித் துறை தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு கட்ட உத்தேசித்துள்ள மேகேதாட்டு திட்டம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய ஜல்சக்தித் துறையிடம் சில விவரங்களை கோரியிருந்தார்.
அதன்படி இந்தாண்டு ஜனவரி மாதத்துக்குப்பின் மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசிடம் கடிதம் ஏதேனும் வந்ததா, அதற்கு கர்நாடக அரசு அளித்த பதில் என்ன, காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதா, இந்த விவகாரத்தில் தமிழகம் தவிர்த்து வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதா, கர்நாடகாவின் மேகேதாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு ஏதேனும் ஒப்புதல் அளித்துள்ளதா என்று கோரியிருந்தார்.
இவற்றுக்கு மத்திய ஜல்சக்தித்து றை அளித்த பதில்கள்: முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா, கடந்த மார்ச் 15-ம் தேதி, பெங்களூரு நகரின் குடிநீர் பற்றாக்குறை மற்றும் மேகேதாட்டு திட்ட விரிவான திட்ட அறிக்கை தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதம், திட்ட அறிக்கை ஆகியவை மத்திய நீர்வள ஆதாரத் துறைக்கு அனுப்பப்பட்டது.
தமிழக அரசின் நீர்வளத் துறை செயலர் பிப்.7-ம் தேதியும் அமைச்சர் துரைமுருகன் பிப்.23-ம் தேதியும் மேகேதாட்டு தொடர்பாக எழுதிய கடிதங்கள் பெறப்பட்டன. மேகேதாட்டு தொடர்பாக மத்திய நீர்வள ஆணையத்திடம் தமிழகம் தவிர்த்து வேறு எந்த மாநிலமும் கடிதம் அளிக்கவில்லை. மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் எவ்வித அனுமதியையும் இதுவரை வழங்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT