Published : 25 Jul 2024 06:36 AM
Last Updated : 25 Jul 2024 06:36 AM

இந்தியாவில் ஏழ்மையை ஒழிக்க நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தல்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் | கோப்புப் படம்

நாகர்கோவில்: இந்தியாவில் யாருக்கும் ஏழ்மை என்பது இருக்கக்கூடாது. இதற்காக நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசினார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களையும், வரலாற்றையும் இளம்தலைமுறையினர் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில், காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரை 100 இடங்களில் சக்ரா பவுண்டேஷன் என்ற அமைப்பு தியாகப் பெருஞ்சுவரை அமைத்து வருகிறது.

தமிழ்நாட்டில் முதல் தியாகப்பெருஞ்சுவர் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அகிலபாரத தலைவர் மோகன் பாகவத்பங்கேற்று, தியாகப் பெருஞ்சுவரைத் திறந்து வைத்து பேசியதாவது:

சீனாவை விடவும் மிகவும் பழமையானது பாரத நாடு. ரோம்,கிரேக்கம் போன்ற சாம்ராஜ்யங்கள் இன்று வெறும் மண்ணாக இருக்கின்றன. நம் நாடு இன்றும் உயிரோட்டத்துடன் இருக்கிறது.

இங்கு பல லட்சம் தலைமுறைகளில் வாழ்ந்தவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் ஆணித்தரமாக செயல்படுத்தி, உணர்ந்து உருவாக்கி கொடுத்தது இந்த பாரதப்பண்பாடு. இதை உருவாக்குவதற்கு பல கோடி பலி தானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எத்தனையோ வெளிநாட்டு தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அவை அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிகண்டவர்கள் நாம்.

பாரதம் உயர்ந்தால் உலகம் உயரும்: பாரத நாட்டின் பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காக இங்கு பலதியாகிகள் உயிரிழந்திருக்கிறார்கள். நாமும் உழைக்கிறோம், ஒன்றுபடுகிறோம், ரத்தம் சிந்துகிறோம். ஒற்றுமை உணர்வைக் கொடுக்கும் பாரதத்தை உலகம் எதிர்பார்க்கிறது.

நாட்டில் யாருக்கும் துக்கமோ, ஏழ்மையோ இருக்கக் கூடாது. இதற்காக நாம் ஓய்வில்லாமல் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். பாரதம் நன்றாக இருக்க வேண்டும் என்றுநினைப்பது, உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். பாரதம் எந்த அளவுக்கு உயர்கிறதோ, அந்த அளவுக்கு உலகுக்குநன்மை கிடைக்கும். இது நமது வாழ்க்கை லட்சியமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கேந்திர அகில பாரத தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் சக்ரா ராஜசேகர் வரவேற்று பேசினார், வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்த் ஜி மகாராஜ், சுவாமி யதாதத்மனத் ஜி மகாராஜ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x