

வால்பாறையில் ஜுலை மாதத்திற்கான சம்பளம் கிடைக்காமல் 280 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை தேயிலைக் காடுகள் அடங்கிய மலைப் பிரதேசம். பொள்ளாச்சியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் வனப்பகுதிக்குள் உள்ள சிறு நகரம் இது.
இங்குள்ள மாணவ, மாணவிகளின் கல்விக்காக 43 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், 8 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், 18 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், 9 அரசு தொடக்கப் பள்ளிகள், 2 அரசு நடுநிலைப் பள்ளிகள், 3 அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும் இங்கு பயின்று வருகின்றனர்.
வால்பாறையில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 280. பெரும்பாலான ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு வந்து பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளம் இதுவரை கிடைக்கவில்லை. சரியான தேதியில் சம்பள பில் உள்ளிட்டவற்றை கருவூலத்திற்கு அனுப்பாததால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் 280 ஆசிரியர்களும் வேறு வழியின்றி தவித்து வருகின்றனர்.
பொறுப்பேற்பது யார்?
வால்பாறை தொடக்கக் கல்வி அலுவலராக இருந்த காளிமுத்து என்பவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு சமீபத்தில் பணியில் சேர்ந்ததாகவும், ஆனால் பொறுப்பு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அவருக்குப் பதில் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த சரவணன் என்ற அலுவலர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதனால் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ரமேஷ்பாபு என்பவரே சம்பள பில் உள்ளிட்டவற்றை கருவூலத்திற்கு அனுப்பி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் இப்பிரச்சினையில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தொடங்கி அனைத்து தரப்பு அதிகாரிகளும் நழுவ முயற்சிப்பதாக ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
இது முதல் முறை அல்ல
சில மாதங்களுக்கு முன்பும் இதேபோன்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க அதிகாரிகள் இழுத்தடித்துள்ளனர். இதனால் ஏப்ரல் மாதம் ஆசிரியர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு மாதத்தின் கடைசி தேதியில் சம்பளம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நிலைமை சற்று சீரடைந்தது. மீண்டும் தற்போது சம்பளம் வழங்க தாமதப்படுத்தப்படுகிறது.
சின்கோனா 5-வது பிரிவு, மருகாளி, கருமுட்டி, வெள்ளிமுடி உள்ளிட்ட பகுதிகள் வால்பாறையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளன. இந்த பகுதிகளுக்கு பேருந்துகளிலேயே பணிக்குச் சென்று வர முடியும். மாதத்தின் 25-ம் நாளில் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கும் நடுத்தர அரசு ஊழியர்கள் தான் நாங்களும். குறைந்தபட்சம் மாதத்தின் முதல் தேதியில் சம்பளம் கொடுக்க வேண்டும். வனப்பகுதி என்பதால், அட்டகட்டியைத் தாண்டி எங்களால் பிரச்சினைகளை வெளியில் கொண்டு செல்ல முடிவதில்லை. அப்படியே கொண்டு சென்றாலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை என்கின்றனர் ஆசிரியர்கள்.
இது குறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் பாபு கூறுகையில், நான் இங்கு பொறுப்பேற்று சில தினங்களே ஆகிறது. 20-ம் தேதியே கருவூலத்திற்கு பில் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகே நான் பொறுப்பேற்றதால் 29-ம் தேதி தான் பில் அனுப்பப்பட்டது. ஆசிரியர்களின் பிரச்சினை எனக்கும் புரிகிறது. அநேகமான இது இன்று சரியாகி விடும் என்றார்.
கபளீகரம் செய்யும் கருவூலம்
ஆசிரியர்களுக்கு சம்பளம் தாமதப்படுவதில் மறைமுகக் காரணம் வால்பாறை கருவூலத்தில் நிலவும் லஞ்சப் பிரச்சினை என்றும் கூறப்படுகிறது.
2003-க்கு முன்பு பணியில் சேர்ந்த மூத்த ஆசிரியர்களின் சம்பளத்தில் 10 சதம் பிடித்தம் செய்து சேமிப்பாக கணக்கு வைத்து, தேவைப்படும்போது எடுத்துக் கொண்டு அதனை தவணை முறையில் திருப்பிச் செலுத்தும் நடைமுறை உள்ளது. ஆனால் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் கருவூலத்தில் குறிப்பிட்ட தொகை லஞ்சம் கேட்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தங்களது சேமிப்புத் தொகைக்கு எதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டுமென சிலர் எதிர்க்கும்போது, அவர்கள் சார்ந்துள்ள துறையில் அனைவரது பணப் பலன்களும் தாமதப்படுத்தப்படுகிறது. இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, அரசு அதிகாரிகள் அனைவருக்கும் இதே நிலைதான் என அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதியிடம் விளக்கம் கேட்டபோது, சம்பளம் தாமதம் ஆவதற்கு கல்வித் துறை பொறுப்பு அல்ல. கருவூலத்தில் பணம் வழங்குவதில் ஏதோ பிரச்சினை நிலவுகிறது. திங்கள்கிழமை இரவுக்குள் பணம் வந்திருக்கும் என்றார்.