Published : 25 Jul 2024 05:38 AM
Last Updated : 25 Jul 2024 05:38 AM
சென்னை: சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 234 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க விசிக தலைவர் திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது: ஏற்கெனவே அறிவித்தபடி, ஆக.17-ம் தேதி விசிக தலைவர் பிறந்தநாளையொட்டி மது,போதை ஒழிப்பு விழிப்புணர்வு பணிகளை ஒருமாத காலத்துக்கு முன்னெடுக்கவுள்ளோம். இறுதியாக செப்.17-ம்தேதி கள்ளக்குறிச்சியில் மகளிர் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது விசிகவில் 144 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். கட்சியை மறுசீரமைப்பு செய்து தொகுதிவாரியாக 234 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மாவட்டத்துக்கான துணை நிர்வாகிகளை அறிவிப்பதோடு, 234 தொகுதிகளும் விசிகவில் அமைப்புரீதியான மாவட்டங்களாக அறிவிக்கப்படும். நவம்பர் மாதத்தில் மாநில நிர்வாகிகள் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி இறுதியில் முழுமையான கட்சி நிர்வாகம் அறிவிக்கப்படும். இதையடுத்து ‘அதிகாரத்தை நோக்கி மக்களோடு திருமா' என்ற கருப்பொருளை முன்வைத்து பணிகள் தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT