Published : 28 May 2018 01:01 PM
Last Updated : 28 May 2018 01:01 PM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; ஆட்சியர் அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆய்வு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுற்றுவட்டார கிராம மக்கள் கடந்த 22-ம் தேதி நடத்திய போராட்டத்தில் தமிழக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் அமலில் இருந்த 144 தடை உத்தரவு ஞாயிற்றுக்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று (திங்கள்கிழமை) தூத்துக்குடி சென்றார்.

உடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் சென்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் 5-வது மாடியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை அறிவுறுத்தினார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருவதாக கூறினார்.

இதன்பின்பு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளையும், தீ வைத்து கொளுத்தப்பட்ட வாகனங்களையும் பார்வையிட்டார். பின்னர், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோருடன் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x