Published : 18 May 2018 05:07 PM
Last Updated : 18 May 2018 05:07 PM

அதிகாரமற்ற காவிரி ஆணையத்தால் தமிழகத்திற்கு நன்மை இல்லை: அன்புமணி குற்றச்சாட்டு

காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை நிர்வகிக்கும் அதிகாரமற்ற ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு தயாரித்த வரைவுச் செயல்திட்டத்தை ஏற்றுக் கொள்வதாகவும், அத்திட்டத்தை நடப்பு பருவத்திலேயே செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை நிர்வகிக்கும் அதிகாரமற்ற ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 16 ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டின.

ஆனால், இந்த ஆட்டத்தில் தமிழ்நாட்டு மக்களின் கண்கள் தான் கட்டப்பட்டு, தமிழகத்திற்கு எதிரான சதித் திட்டத்தை அவர்கள் தெரிந்து கொள்ள முடியாதபடி தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தமிழக மக்களின் நிலை இதுவென்றால் தமிழக ஆட்சியாளர்கள் இந்த விஷயத்தில் கண்கள் இருந்தும் பார்வையற்றவர்களாக செயல்பட்டனர்.

மத்திய அரசு எந்த திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாலும், “அது அற்புதமான திட்டம்; அதனால் காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டு விட்டது” என்று மத்திய அரசின் புகழ் பாடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இப்போது மத்திய அரசு அமைக்கவுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு எந்த வகையிலும் பயன் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும், இதை தமிழக அரசு வரவேற்றுப் பாராட்டியிருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களிடமிருந்து இதை மட்டும் தான் எதிர்பார்க்க முடியும்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த பக்ரா-பியாஸ் வாரியத்தை ஒத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பது தான் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு. பக்ரா-பியாஸ் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் பியாஸ் ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணைகள் உள்ளன.

அதனால் தான் அந்த வாரியம் பியாஸ் ஆற்றின் நீரை பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு எந்த சிக்கலும் இல்லாமல் பகிர்ந்து அளித்து வருகிறது. அதேபோன்ற அதிகாரங்களுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் தான் தமிழகத்திற்கு நீதி கிடைக்கும்.

ஆனால், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை பல்வேறு கட்ட ஆய்வுக்கு உட்படுத்திய மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் இணைந்து அத்தகைய அதிகாரம் இல்லாத ஆணையத்தை அமைத்துள்ளன. இது மிகப்பெரிய ஏமாற்று வேலை. மத்திய அரசும், கர்நாடக பாஜகவும் இணைந்து கர்நாடகத்துக்கு சாதகமான அமைப்பை உருவாக்கி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் செய்துள்ளன. இதை உச்ச நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனைத்து அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றம், தமிழக அரசு ஆகிய மூன்று ஜனநாயக அமைப்புகளும் ஒரே குரலில் தெரிவித்துள்ளன. கர்நாடகத்திலுள்ள அணைகளில் இருந்து எவ்வளவு தண்ணீரை திறந்து விட வேண்டும்? எப்போது திறக்க வேண்டும்? என்பன உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரமும், அவை செயல்படுத்துகிறதா? என்பதைக் கண்காணிக்கும் அதிகாரமும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன என்பது உண்மை தான்.

ஆனால், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடும் அதிகாரம் அந்த ஆணையத்துக்கு இல்லாத நிலையில், மற்ற அதிகாரங்களை மட்டும் வழங்கியிருப்பதால் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை? தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டால் அதை கர்நாடகம் மதித்து தானே ஆக வேண்டும்? என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.

காவிரி மேலாண்மை ஆனையம் அல்ல. அதை விட அதிகாரம் கொண்ட அமைப்புகள் ஆணையிட்டால் கூட கர்நாடகம் மதிக்காது என்பது தான் உண்மை. காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த அமைப்பின் உத்தரவுகளை கர்நாடகம் மதிக்கவில்லை.

உதாரணமாக, 2002 ஆம் ஆண்டு தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் எலிக்கறி சாப்பிடும் அளவுக்கு கடுமையான வறட்சி நிலவியது. அதை சமாளிக்க தமிழகத்திற்கு வினாடிக்கு 9000 கனஅடி வீதம் தண்ணீர் வழங்கும்படி அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் 09.09.2002 ஆம் ஆண்டு ஆணையிட்டது.

ஆனால், அதை எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான கர்நாடக அரசு மதிக்கவில்லை. அதன்பின்னர் உச்ச நீதிமன்றமும் தமிழகத்திற்கு வினாடிக்கு 9000 கன அடி தண்ணீர் திறக்க ஆணையிட்டது. அதையும் கர்நாடகம் மதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகு தான், அக்டோபர் 28 ஆம் தேதி தான் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது.

காவிரி நதிநீர் ஆணையம் ஆணையிட்டு 50 நாட்களுக்குப் பிறகே தண்ணீர் திறந்து விடப்பட்டதால், அதைக் கொண்டு குறுவை பருவ நெற்பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

அதன்பிறகும் உச்ச நீதிமன்றம் பலமுறை ஆணையிட்டும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காத கர்நாடகம் இந்த காவிரி ஆணையத்தின் முடிவை மதிக்கும் என நம்புவது அறியாமையின் வெளிப்பாடாகவே இருக்கும்.

எனவே, பாமக சார்பில் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்துடன் கூடிய காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் காவிரி பிரச்சினைக்கு நிரந்தத் தீர்வாக அமையும். எனவே, அதை நோக்கிய சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

‘ஜூன் மாதத்துக்குள் காவிரி வரைவு செயல்திட்டத்தை செயல்படுத்துங்கள்’-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு; வழக்குகள் முடித்துவைப்பு

நாடா, கட்சியா? முடிவெடுங்கள் ராகுல்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x