Published : 19 May 2018 07:56 am

Updated : 19 May 2018 07:56 am

 

Published : 19 May 2018 07:56 AM
Last Updated : 19 May 2018 07:56 AM

மதுரையில் தனியார் வங்கி மண்டல அலுவலகத்தில் தீ: 60 மடிக்கணினிகள், முக்கிய ஆவணங்கள் சேதம்

60

மதுரை கே.கே. நகரில் தனியார் வங்கி மண்டல அலுவலகத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் 60-க்கும் மேற்பட்ட மடிக்கணினிகள், கணினிகள், முக்கிய ஆவணங்கள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.

கே.கே.நகர் வக்போர்டு கல்லூரிக்கு எதிரே தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடிக் கட்டிடம் உள்ளது. இதன், 2-வது மாடியில் ஐசிஐசிஐ வங்கியின் லைப்-இன்சூரன்ஸ் பிரிவின் மண்டல அலுவலகம் செயல்படுகிறது. இங்கு 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த அலுவலகத்தின்கீழ் ஏராளமான கிளை அலுவலகங்கள், ஏஜென்ட்கள் பணியாற்றுகின்றனர். முதல் மாடியில் பிரபல ஜவுளிக்கடை நிறுவனம் செயல்படுகிறது.


தீயணைப்பு வாகனங்கள்

இந்த கட்டிடத்தின் காவலாளி வழக்கம்போல நேற்று காலை 7 மணிக்கு அலுவலகத்துக்கு வந்தார். குளிர்சாதனக் கருவிகள் இயங்கும் சுவிட்சை ஆன் செய்தார். அப்போது, திடீரென அலுவலகம் உள்ளே தீப்பற்றியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி உடனடியாக வங்கி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் அலுவலகத்தின் அனைத்து பகுதியிலும் தீ பரவியது.

இதுபற்றி தகவலறிந்ததும் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்தன. அதற்குள் தீ 2-வது மாடி முழுவதும் பரவியதால் தீயணைப்பு வீரர்கள் அருகில் செல்ல முடியவில்லை. இதையடுத்து பக்கத்து கட்டிட மாடிகளில் ஏறி நின்று அங்கிருந்து தண்ணீரை பாய்ச்சி தீயை அணைக்க போராடினர்.

மாநகராட்சி சார்பில், பத்துக் கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, தீயணைப்பு வாகனங்களில் நிரப்பி தீயை அணைக்க உதவினர். இருப்பினும், தீயின் வேகம் குறையவில்லை.

சிலிண்டர் வெடித்தது

சுவாசத்துக்கென ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியுடன் மாடிக்குச் சென்று தீயை அணைக்க வீரர்கள் திட்டமிட்டனர். இதற்காக ஆக்சிஜன் நிரப்பிய சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டன. ஒரு வீரர் சிலிண்டரை கையாளும்போது, திடீரென வெடித்து சிதறியது.

இதில் தனியார் நிறுவன ஊழியர், தீ விபத்தை படமெடுத்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் முருகேஷ், தீயணைப்பு வீரர் ஒருவர் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக் குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தால் சேத மதிப்பு ரூ.15 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x