

வில்லிவாக்கம் ராஜமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயில் முன்பு குவியும் குப்பைகளால் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக ‘தி இந்து’ உங்கள் குரலில் வாசகர் புகார் கூறியுள்ளார்.
வில்லிவாக்கம் ராஜமங்கலம் சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் நுழைவாயில் அருகே குப்பைகள் கொட்டப் படுவதாகவும் இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவ தாகவும் ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட அங்குமதி என்ற வாசகர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் வாயிலில் பெரிய அளவிலான குப்பைத் தொட்டியை அமைத்துள்ளனர். அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும், இங்கு வந்து கொட்டப்படுகிறது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துர்நாற்றம் வீசுகிறது.
மழைக்காலத்தில் அப்பகுதியில் நடக்க முடியாத அளவுக்கு தண்ணீரும் தேங்கி நிற்கிறது. மழைநீரும், குப்பையும் சேர்ந்தால் நோய்கிருமிகள் பரவும் அபாயமும் ஏற்படும். அதனால் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் காலையில் மாநகராட்சி லாரிகள் வழியை மறித்துக் கொண்டு குப்பைகளை அள்ளுவதால், யாரும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் செல்ல முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுகாதார அதிகாரி விளக்கம்
இதுதொடர்பாக அப்பகுதி சுகாதார அலுவலர் மகாலட்சுமி யிடம் கேட்ட போது, “ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு உள்ள குப்பை தொட்டியை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்சினை பற்றி, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறேன்” என்றார்.