

சென்னை: தமிழகத்தில் எங்கு வீடு கட்டினாலும், ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு தாமதமின்றி உடனடியாக அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்முறையாக ஆன்லைனில் உடனடி கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்களிடம் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
வீட்டுவசதி துறை ஆய்வின்போது, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படி சரிசெய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். கட்டிட அனுமதி அளிப்பதில் பல சிக்கல்கள் இருந்ததால், முதல்வரின் ஆலோசனைப்படி, கட்டிட அனுமதி நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2,500 சதுரஅடி நிலத்தில் 3,500 சதுரஅடி பரப்பில் வீடு கட்ட அனுமதி கேட்டு நிறைய மனுக்கள் வருகின்றன. இதனால், அதிகாரிகளுக்கு வேலைச்சுமை அதிகரித்து, அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இதை உணர்ந்துதான், சாதாரண மக்கள் கட்டும் வீடுகளுக்கு, சுயசான்று அடிப்படையில் தாமதமின்றி அனுமதி அளிக்க வேண்டும் என்ற திட்டத்தை முதல்வர் தெரிவித்து, தற்போது தொடங்கியும் வைத்துள்ளார்.
தமிழகத்தில் எங்கு வீடு கட்டினாலும் தாமதமின்றி அனுமதி கொடுப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த 5 நாட்களில் இத்திட்டத்தில் எத்தனை மனுக்கள் பெறப்பட்டுள்ளன, அதில் எத்தனை மனுக்களுக்கு தீர்வு அளித்துள்ளோம் என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், மாதம்தோறும் வந்த மனுக்கள், தீர்வு அளிக்கப்பட்ட மனுக்கள் எண்ணிக்கை, தீர்வு அளிக்கப்படாத மனுக்கள், அதற்கான காரணம் ஆகியவற்றை கண்காணிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கட்டிடம் கட்டும் பொறியாளர்கள், கட்டிடக்கலை நிபுணர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, பிரச்சினைகள் ஏற்படாத வகையில் கட்டிடங்களை தரமாக கட்டித்தர வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளோம். எனவே, கட்டிட அனுமதியில் இனி தாமதம் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.