பொற்கொடி, பி.ஆனந்தன்
பொற்கொடி, பி.ஆனந்தன்

பகுஜன் சமாஜ் கட்சி புதிய மாநில தலைவர் வழக்கறிஞர் பி.ஆனந்தன்: ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமனம்

Published on

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 16பேர் கைது செய்யப்பட்டனர். அதில்,ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப் பட்டார். போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை நியமிக்க வேண்டும் என்று கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இதனை கட்சியின் மேலிடம்பரிசீலனை செய்து வந்தது. ஆனால், கட்சியின் தலைவராக இருக்க பொற்கொடி விரும்ப வில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி ஆலோசனை செய்தார். இறுதியாக, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தன், துணைத் தலைவராக டி.இளமான் சேகர், பொருளாளராக கமலவேல்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பெரம்பூரில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் அசோக் சித்தார்த், கோபிநாத் ஆகியோர் மாநில ஒருங்கிணைப்பாளர், தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் நியமனத்தை அறிவித்தனர். மீதமுள்ள மாநில நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in