Published : 23 Jul 2024 05:20 AM
Last Updated : 23 Jul 2024 05:20 AM

சென்னையில் நாகஸ்வர திருவிழா, தமிழ் இசை விழா தொடக்கம்: மூத்த நாகஸ்வர, தவில் வித்வான்களுக்கு விருது

தியாக பிரம்ம கான சபா மற்றும் பாக்கியம் கட்டுமான நிறுவனம் சார்பில் நாகஸ்வரம் இசை விழா மற்றும் தமிழ் இசை விழாவின் தொடக்க நிகழ்ச்சி தி.நகர் வாணி மகாலில் நேற்று நடைபெற்றது. இதில் ‘வாணி லய கலா நிபுணா’ விருது பெற்ற மூத்த தவில் கலைஞர் டி.ஆர்.சுப்பிரமணியம், ‘வாணி வாத்திய கலா நிபுணா’ விருது பெற்ற மூத்த நாகஸ்வர கலைஞர் சிவலிங்கம் ஆகியோருடன் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முதல்வர் பி.சாய்ராம், பாக்கியம் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.ராமசாமி, தியாக பிரம்ம கான சபா தலைவர் டெக்கான் மூர்த்தி, துணை தலைவர் சந்திரசேகர்.படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: ஸ்ரீ தியாக பிரம்ம ஞான சபை(வாணி மகால்), பாக்கியம் கட்டுமான நிறுவனம் சார்பில் நாகஸ்வரம் திருவிழா மற்றும் தமிழ் இசை விழா சென்னை தி.நகர் வாணி மகாலில் நேற்று தொடங்கியது. இவ்விழாவுக்கு பாக்கியம் கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வி.ராமசாமி தலைமை தாங்கினார். அவரதுதாயார் வி.ஜானகி அம்மாள் நினைவாக மூத்த இசை கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

மூத்த நாகஸ்வர வித்வான் சேஷம்பட்டி சிவலிங்கத்துக்கு "வாணி வாத்திய கலா நிபுணா" விருதையும், மூத்த தவில் வித்வான் திருநாகேஸ்வரம் டி.ஆர்.சுப்பிரமணியத்துக்கு "வாணி லய கலா நிபுணா" விருதையும் வி.ராமசாமி வழங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, “அரசு, அரசியல், கோயில், திருமணம் என அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் மங்கல வாத்தியம் முழங்கும். திறமையும் பொறுமையும் உள்ள இசைக் கலைஞர்களுக்கு குறிப்பாக நாகஸ்வரம், தவில் வித்வான்களுக்கு நாம் உரிய மரியாதை அளிக்க வேண்டும். நாகஸ்வர இசையைக் கேட்டால் மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். தெய்வீகமான அந்த இசை மனதுக்கு அருமருந்தாகும்" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி முதல்வர் தோப்பூர் பி.சாய்ராம் பேசும்போது, “மூத்த நாகஸ்வர வித்வான் சிவலிங்கம் பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் எங்கள் இசைக் கல்லூரி மாணவர்என்பதில் எங்களுக்குப் பெருமை.மூத்த தவில் வித்வான் டி.ஆர்.சுப்பிரமணியம் நிறைகுடம் போன்றவர். பல நாடுகளுக்கு தவில் இசைப் பயணம் மேற்கொண்டு தமிழ் கலாச்சாரத்தைப் பரப்பியுள்ளார்" என்று பாராட்டி னார்.

முன்னதாக ஸ்ரீதியாக பிரம்ம ஞான சபையின் தலைவர் டெக்கான்மூர்த்தி வரவேற்றார். நிறைவில், துணைத் தலைவர் சந்திரசேகர் நன்றி கூறினார். வாணி மகாலில் நாகஸ்வரம் விழா நாளை (ஜூலை 24) வரை 3 நாட்களும், தமிழ் இசை விழா 25, 26-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது.

தொடக்க நாளான நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை பி.பாலகணேசன், பி.பாகேஸ்வரி, பி.ஹரிணி, பி.கனிமொழி ஆகியோரின் நாகஸ்வரம், திருவண்ணாமலை டி.கே.மோகன், எம்.ஏ.எஸ்.புருஷோத்தமன் ஆகியோரின் தவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x