நூலக பயன்பாட்டை பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நூலக பயன்பாட்டை பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: நூலக பயன்பாட்டை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கல்வி நிறுவனங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவில் கிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு சட்டவிரோதமாக புத்தகங்கள் கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும். நூலகங்களின் தரத்தை உயர்த்தவும், நூலங்களின் விபரங்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் (தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி) மற்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: புத்தகங்கள் வெளியான ஆண்டை மாற்றக்கூடாது என்பது விதி. அதைமீறி பல்வேறு புத்தகங்களை பல ஆண்டுகளுக்கு பின்பு புதிய புத்தகம் போல் வெளியிடுவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு 2019-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை அரசு தரப்பில் பதில் அளிக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் வெளியான அரசாணை, வெளிப்படையான புத்தக கொள்முதலுக்கு வழிவகுத்துள்ளது. தலைப்பு அல்லது ஆசிரியரின் பெயரை மாற்றி, புத்தகத்தை மீண்டும் விற்கப்படுவது நியாயமற்றது.

பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதை முறைப்படுத்த ஏற்கெனவே இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பொது நூலகங்களுக்கு பொதுநலன் கருதி புத்தகங்கள் கொள்முதல் செய்யாவிட்டால், அலெக்சாண்டிரியா நூலகத்துக்கு ஏற்பட்ட நிலையை சந்திக்க வேண்டியது வரும். புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்களை ஊக்குவிக்க வேண்டும். பொது மக்களிடையே நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். புத்தக கொள்முதல் மற்றும் புத்தகம் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நூலக பயன்பாட்டை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கல்வி நிறுவனங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in