குற்றச்சாட்டுப் பதிவுக்கு செந்தில் பாலாஜி ஆஜராகாததால் விசாரணை தள்ளிவைப்பு

செந்தில் பாலாஜி | கோப்புப்படம்
செந்தில் பாலாஜி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: குற்றச்சாட்டுப் பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை என்பதால், வழக்கு விசாரணையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜூலை 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தன்னை விடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்காக செந்தில் பாலாஜியை இன்று (ஜூலை 22) நேரில் ஆஜர்படுத்தவும் சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதால், குற்றச்சாட்டுப் பதிவை தள்ளி வைக்க வேண்டும் செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி எஸ். அல்லி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், குற்றச்சாட்டு பதிவுக்கு நேரில் ஆஜராக முடியவில்லை, என அவரது தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் ஜூலை 29-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in