சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை இன்னும் வெளியிடாமல் இருப்பதா? - அன்புமணி கண்டனம்

சென்னை பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம்
Updated on
1 min read

சென்னை: "தமிழ்நாட்டின் முதன்மையான மற்றும் பழமையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் தான். பிற பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய சென்னை பல்கலைக்கழகமே தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடாததை மன்னிக்க முடியாது" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிக் கல்லூரிகள், பிற பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்து வகுப்புகள் தொடங்கி விட்ட நிலையில், சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான இறுதிப் பருவத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை பறிக்கும் சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த அலட்சியம் கண்டிக்கத்தக்கது. இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாத மத்தியில் வெளியிடப்பட வேண்டும். அப்போது தான் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாதத் தொடக்கத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை முடித்து வகுப்புகளைத் தொடங்க முடியும்.

தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இளநிலைப் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் குறித்த காலத்தில் வெளியிடப்பட்டு விட்டன. அதனடிப்படையில் முதுநிலை மாணவர் சேர்க்கையும் நிறைவடைந்து விட்டது.

சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி பெறாத 108 கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், அக்கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு தேர்வு எழுதிய மாணவர்களால், பிற கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்கள் தாங்கள் படித்த கல்லூரிகளில் மட்டுமே இனி சேர முடியும். அந்தக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும் பிற கல்லூரி மாணவர்கள் போட்டியிடுவார்கள் என்பதால் அவர்களுக்கு கடும் போட்டி ஏற்படும். இதனால் பல மாணவர்கள் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை இழப்பார்கள். இதுவா திராவிட மாடல்?

தமிழ்நாட்டின் முதன்மையான மற்றும் பழமையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் தான். பிற பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய சென்னை பல்கலைக்கழகமே தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடாததை மன்னிக்க முடியாது. பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடி, பல மாதங்களாக துணைவேந்தர் பதவி காலியாக இருப்பது ஆகியவை தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். இந்த சீரழிவுகள் அனைத்துக்கும் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்தி அவற்றில் சென்னைப் பல்கலைக் கழக மாணவர்கள் இணைந்து படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சென்னைப் பல்கலைகழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமித்தல், நிதி நெருக்கடியைத் தீர்த்தல் ஆகியவற்றுக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in