ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் கட்டிடம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கான அனுமதியை பரப்பளவு, கட்டிடத்தின் உயரம் ஆகியவற்றின் அடிப்படையில், தகுந்த உள்ளாட்சி அமைப்புகள், நகர ஊரமைப்பு இயக்ககம் (டிடிசிபி), சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஆகியவை வழங்கி வருகின்றன.

ஏற்கெனவே, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கட்டிட அனுமதிக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளிலும் ஆன்லைனில் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்.2-ம் தேதி முதல் ஊராட்சிகளில் கட்டிட அனுமதிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையொட்டி பல்வேறு சலுகைகளையும் தமிழக அரசு அறிவித்தது. தளப்பரப்பு குறியீட்டிலும், பணிமுடிப்பு சான்றிதழ் பெறுவதிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

இந்த சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் ‘2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்துக்கு கட்டிட அனுமதி தேவையில்லை. பணி முடிவு சான்று பெற தேவையில்லை’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழகத்தில் முதல்முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டத்தின்படி, www.onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கப்படும். சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் விண்ணப்பதாரர்கள் செல்ல வேண்டியது இல்லை. கட்டிட பணிகள் முடிந்ததும், முடிவு சான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. பரிசீலனை கட்டணம், கட்டமைப்பு, வசதிக் கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. 2,500 சதுரஅடி வரையிலான மனையில், 3,500 சதுரஅடியில் கட்டப்படும் வீடுகளுக்கு இத்திட்டம் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in