Published : 12 May 2018 01:22 PM
Last Updated : 12 May 2018 01:22 PM

4-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பொறியியல் பட்டதாரி: தாங்கிப் பிடித்துக் காப்பாற்றிய காவலாளி

வேலை கிடைக்காத விரக்தியில் முகநூலில் பதிவு செய்துவிட்டு 4- வது மாடியிலிருந்து குதித்த பொறியியல் பட்டதாரி இளைஞரை தரைத்தளத்தில் இருந்த காவலாளி தாங்கிப் பிடித்துக் காப்பாற்றினார்.

சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சபரிநாதன் (24), பொறியியல் பட்டதாரி. இவர் பூந்தமல்லி அருகே உள்ள குமணன் சாவடியில் அறை எடுத்து தங்கியிருக்கிறார். வேலை கிடைக்காமல் கிடைத்த வேலைகளைச் செய்து வந்துள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான இவர் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். தற்கொலை செய்துகொள்ளும் முன் தான் ஏன் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டும், முகநூலில் நேரடியாகப் பேசியும் காரணத்தைக் கூறியுள்ளார்.

அவரது பேச்சில் நிறைய குழப்பங்களும் வேலை இல்லாத விரக்தியும், கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு குறித்த தவறான புரிதல் காரணமாக வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பியுள்ளார். ஆனால் இந்த பூமிதான் சொர்க்கம் என்று கூறும் அவர் தனது மரணத்தின் மூலம் எதுவும் மாறப்போவதில்லை என 45 நிமிடம் முகநூலில் பேசியுள்ளார்.

அவரது பேச்சில் “எல்லாமே வியாபாரமாகி விட்டது. மாணவர்களுக்கு சாதியே தேவையில்லை. இட ஒதுக்கீடே உதவித்தொகைக்காக என்று தான் நினைக்கிறேன். நான் செத்தால் சொர்க்கத்துக்குப் போவேன் என்று நினைக்கவில்லை. பூமிதான் சொர்க்கமே. கல்வியை ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். பிச்சை போடுவதை விடக் கல்வி கொடுங்கள்.

நிறைய விஷயங்களை நான் இழக்கிறேன். நான் இறந்ததற்குப் பின்னர் ஏன் இறந்தேன் என்று காரணம் தெரியவேண்டும். அனைவரும் மாற்றத்திற்காகப் போராட வேண்டும். நான் ஒருவன் நினைத்தால் எதுவும் மாறாது. அனைவரும் சேர்ந்து போராட வேண்டும்” என்கிற ரீதியில் பேசியுள்ளார்.

பின்னர் தற்கொலை செய்துகொள்ள ஒரு பொது இடத்தை தேர்வு செய்த அவர் நேற்று முன் தினம் மாலை, சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலுக்குச் சென்றார். அங்கு 4-வது மாடிக்கு சென்ற அவர் அதன் கைப்பிடிக்கு வெளிப்புறம் குதிக்கத் தயாரானார். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை கைப்பிடியை விட்டு உள்ளே வரும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் யார் பேச்சையும் கேட்கவில்லை. பரபரப்பாக இருந்த அந்த சூழ்நிலையை பார்த்த தரைத்தளத்தில் இருந்த காவலாளி தேவசகாயம் கீழே குதிக்கும் சபரிநாதனைத் தாங்கிப் பிடிக்கத் தயாரானார். அவரைப் பார்த்து பொதுமக்கள், ‘அப்படிச் செய்யாதீர்கள் உங்கள் மீது விழுந்தால் உங்கள் உயிரும் சேர்ந்து போய்விடும்’ என எச்சரித்தனர்.

ஆனாலும், தேவசகாயம் அந்த இளைஞரைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் கீழே தயாராக நின்றார். 4-வது மாடியில் இருந்த சபரிநாதனை சிலர் அருகில் சென்று தற்கொலை முயற்சியைக் கைவிடும்படி கேட்டனர். ஆனால் அவர் அதைக் கேட்காமல் 4-வது மாடியிலிருந்து குதித்தார். அதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அலறினர்.

ஆனால், கீழே நின்றிருந்த காவலாளி தேவசகாயம் வெகு சாதுர்யமாக 4-வது மாடியிலிருந்து குதித்த சபரிநாதனை தாங்கிப் பிடித்தார். வேகமாக சபரிநாதன் கீழே விழ அவரைத் தரையில் விழாமல் சபரிநாதன் தாங்கிப் பிடிக்க இருவரும் கீழே விழுந்தனர். இதில் சபரிநாதனின் கையில் எலும்பு முறிந்தது. தாங்கிப் பிடித்த காவலாளி தேவசகாயத்தின் கால் எலும்பு முறிந்தது.

அதிர்ஷ்டவசமாக சபரிநாதன் 4-வது மாடியிலிருந்து குதித்தும் உயிர் பிழைத்தார். பின்னர் பொதுமக்கள் இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தேவசகாயத்தின் துணிச்சலையும், உதவும் எண்ணத்தையும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x